காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Monday, September 27, 2010

மாணவர்க்கு அரசியல் தேவையா?


அன்பர்களுக்கு வணக்கம்

என் கருத்து
மாணவர்களுக்கு அரசியல்  தேவை
ஏன் எனில் இன்றைய மாணவர்தாம் நாளைய தலைவர்கள்.
இன்றே விதைத்து நீர் ஊற்றி காத்தால் தான் நாளை விதைத்தவர்க்கு மட்டுமல்லாது எல்லோர்க்கும்
உண்ண கனி கிடைக்கும்.
அதுபோல் தம்மையே விதையாக்கி அரசியல் அறிவை மேம்படுத்தி வளர்ந்து நிற்கும் ஒருவரால்தான் ஒரு சமூகத்தை மேம்படுத்தும் தலைவனாக முடியும்.

ஆம் அரசியல் என்பது சமூக மேம்பாட்டிற்கான ஒரு களம்.

சமூக மேம்பாடு என்பது என்ன?

தன் தேவைகளுக்காக ஒரு தனி மனிதன் வாடாதிருப்பதும், மற்றொருவரை நாடாதிருப்பதும் தான். அப்படி ஒரு நிலை உடனடியாக ஏற்பட இன்றைய சூழ்நிலை ஏதுவாக இல்லாதிருக்கலாம்.ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலைக்காக போராடுவதுதான் ஒரு தலைவனின் நிலையாக இருக்க வேண்டும். அதிலும் அந்த தலைவன் ஓர் அரசனாகவும் அதாவது அரசை ஆள்பவராகவும் இருந்தால்தான் அது சாத்தியமாகும். அதற்கு அவர் ஜனநாயக முறைப்படி தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள அரசியல் தான் சிறந்த களம்.


அத்தகைய சிறந்த களத்தில் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொல்வது சிறந்த ஒன்றே!!!

அரசியல் ஒரு சாக்கடை என்பது பொதுவாய் இன்றைய நடைமுறை.
இன்றைய நடைமுறை நிலை என்பதே அரசியல் நிலை ஆகிவிடாது.
அது இன்றைய அரசியல் தலைவர்களின் நிலை.
அதை மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் இன்றைய மாணவராம் நாளைய தலைவருக்கு நிச்சயம் உள்ளது.

தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யவும்

Wednesday, September 15, 2010

காதல் அறிகுறி


*காணுமிடமெல்லாம் காதல்  கடவுள்
கன்னி வடிவிலா

* தூக்கத்தில் மட்டும்
கனவு கண்டவன்
கவுகளில் தூங்குகிறாயா

*உன்
விரலுக்கும் பருவுக்கும்
இரத்தம் சிந்த
யுத்தம் நடக்கிறதா

*காலுக்கடியில்
கள்ளி இருந்தும்
ஒரு ரோஜாவை உன்னால்
ரசிக்கமுடிகிறதா

ஐயகோ ஆபத்து 

*படிப்பதர்க்காய்
புத்தகம்  எடுத்து
பக்கம் எண்ணுகிறாயா

*உச்சி வெய்யிலிலும்
உனக்குள் தொடர் மழையா

*உன் அழகு உருவத்தை
அடிக்கடி ரசிக்கிறாயா
 உன்னை அசிங்கமாய்
காட்டும் கண்ணாடியை
அடித்து ஓடிக்கிறாயா

ஐயகோ ஆபத்து 

கன்னியும் கண்ணிவெடியும் ஒன்று
காலை எடுத்துவிட்டால்
நரகத்தில் நீ மட்டும்
காலை இருத்திவிட்டால்  
நகரத்தில் அவளோடு...

(என் துரோணர் திரு. வைரமுத்து பாணியில் ஒரு முயற்சி)

Wednesday, September 8, 2010

காதல் காலம்


*சுகமுண்டு ஆயிரம்
காதலில் இங்கே

*தனிமையில் துணை வரும்
நினைவுகள் சுகம்
நினைவுகள் பகிரும்
நிமிடங்கள் சுகம்

*இருவருக்கிடையே
இடைவெளி சுகம்
இடைவெளி இல்லா
இறுக்கம் சுகம்

*நினைவுகள் தடுக்கி
விழுவது சுகம்
விளைவாய் வருகிற
விழுப்புண் சுகம்

*சிரிக்கும் போது
சிரிப்பது சுகம்-முகம்
மடியில் புதைத்து
அழுவது சுகம்

*அணைப்பில் அணைந்து
உறங்குதல் சுகம்
விரல் கேசம் கோத  
விழிப்பது சுகம்

*சினம் கொண்டு
திட்டுதல் சுகம்
திட்டுக்கள்  திரும்ப
வாங்கலும் சுகம்

*தனிமையில் புலம்பி
பேசுதல் சுகம்
இணைந்த பின் மௌனம்
இன்னும் சுகம்

*தெரிந்தும் காதல் சொல்ல
வேண்டுதல் சுகம்
வெட்கம் கூடி
சொல்வதும் சுகம்

*அடிக்கடி வருகிற
ஊடல் சுகம்
ஊடல் கடந்த
நாழிகை சுகம்

*காதல் மொழிகள்
பேசுதல் சுகம்
பேசச்சொல்லி கேட்டலும் சுகம்

*படைத்த கவிதைகள்
படிப்பது சுகம்- காதல் கரைத்த
கவிதைகள் புதிதாய்
படைப்பது சுகம்

*கடல்வெளி பரப்பில்
சிறுதுளி நீராய்

தொலைத்திட்ட காதலும் சுகம்

மனவெளி பரப்பில்
பசுமை மங்கா

காதல் காலமும் சுகம்...         

ஆதலினால்....


*மின்னல் ஒரு கண்ணில்
அவள் பிம்பம் மறு கண்ணில்

*பூக்கள் ஒரு கண்ணில்
அதன் வாசம் மறு கண்ணில்

*வெளிச்சம் ஒரு கண்ணில்
கும்மிருட்டு மறு கண்ணில்

*பாலை ஒரு கண்ணில்
பெரும் மலையோ மறு கண்ணில்

*தேகம் ஒரு கண்ணில்
அதன் ஜீவன் மறு கண்ணில்

*தாகம் ஒரு கண்ணில்
நீர் சுனையோ  மறு கண்ணில்

*தெய்வம் ஒரு கண்ணில்
அதன் பக்தன்  மறு கண்ணில்

*தளிர்கள் ஒரு கண்ணில்
அதன் வேர்கள் மறு கண்ணில்

*புயலோ ஒரு கண்ணில்
பெரும் அமைதி மறு கண்ணில்

*கடலோ ஒரு கண்ணில்
அலைகள் மறு கண்ணில்

*பஞ்சம் ஒரு கண்ணில்
பெரும் பசுமை மறு கண்ணில்

*சிரிப்பு ஒரு கண்ணில்
நன்அழுகை மறு கண்ணில்

*ஜனனம் ஒரு கண்ணில்
மரணம் மறு கண்ணில்

*என் காதல் ஒரு கண்ணில்
அவள் காதல் மறு கண்ணில்

*இரட்டை பிறவி என் கண்கள்
இரண்டாய் ஆயின உன்னாலே....

காதல் தவம்


விழி இரண்டிலே எனைக்கலந்தேன்
உந்தன் உடலிலே உயிர் துறந்தேன்

கரிய கூந்தலிலே கரைந்து விட்டேன்
மலர் சூடும் பூவை உன் மனம் நுகர்ந்தேன்

வேரைப்போல் என் உடல் முழுதும்
சிறு கிளைகள் விட்டு நீ பரவி விட்டாய்

உந்தன் பார்வைதனை உந்தன் வார்த்தைதனை
எந்தன் வேருக்கு நீராக்கி
காதல் விதையை நீ விருட்சமாக்கினாய்

விருட்சம் மடிவது கடினம்
என் காதல் என்பதோர் புனிதம்

உன் இதழ் நுனியில்  என் உடல் வைத்தேன்
காதல் உயிர் தன்னை நீ கொடுத்தால்

உடலும் உயிருமாய் இரண்டறக்கலந்து
இறப்பு என்பதை மறந்திடுவோம்

புதிதாய் மறுமுறை பிறந்திடுவோம்  
 

Saturday, September 4, 2010

மழை

*திரிந்து போன தூரிகைகள்

* சின்ன சின்ன ஓவியங்கள்

*உலகத்தின் வெற்றிக்கு
விழுகின்ற எழுச்சிகள்

*விழுந்து தாங்கும்
விதையளவு விழுதுகள்

*காற்றின் மர்மம் தீண்டும்
இயற்கையின் விரல்கள்

*வானம் வீசும்
ஒற்றை எழுத்து
கவிதைகள்

*குருடரும் வாசிக்க‌
முடிந்த ஓசைக்காவியங்கள்

*சூரியன் நோக்கி பறந்த‌
நீர்ப்பறவைகள்

*அருவிகள் செய்யும்
ஆண்டவன் விரல்கள்

*கடலின் தொலைந்து போன‌
செல்வங்கள்

*மேகத்தின் கட்டவிழ்ந்த
கூந்தல்

* பூமியின் சுழற்ச்சிக்கு
ஆண்டவன் கண்டுபிடித்த‌
மூலிகைப் பெட்ரோல்

*கவிதை முடித்து வைக்க‌
ஏது வழி
மழைத்துளியே முற்றுப்புள்ளி

Friday, August 27, 2010

முடிவில்லாத கதை

கதை கேட்டால் மகள்
ஒரு ஊர்ல ஒரு காடு இருந்துச்சாம்
காடுன்னா என்ன?
நெறயா மரம் இருந்தா அது காடு
எங்க அம்மாச்சி வீட்டுக்கு பின்னாடி
காடு இருக்கே
அதுல நான்,குட்டி, மக்கு,அப்பு எல்லாம் வெளாடுவோமே
அப்டியா? ம்... அந்த கட்டுக்குள்ள யானை, .....
அன்னைக்கி கோயில்ல பாத்தமே
பெரிய்ய காலு நீளமா கையி....
ஒனக்கு கத வேணுமா வேணாமா
வேணாம் போ....

சில பதில்களும் ஒரு பதிலும்

பூமிக்குள் என்ன இருக்கிறது?
நீர் என்றார் ஒருவர்
வேர் என்றார் ஒருவர்
கற்குழம்பு என்றார் ஒருவர்
மணல் அடுக்கு என்றார் மற்றொருவர்
இடைமறித்து  
மகள் சொன்னாள்
"பூமிக்குள்ள பூமி தான் இருக்கும்"
   

அமாவாசையும் பௌர்ணமி நிலவும்

மனக் குளத்தில் ஒரு கல்போல
இட்டு வைத்த உன் நினைவுகள் எல்லாம்
மேல் எழுந்து வருகின்றது
ஒரு அமாவாசை இரவில் ...
விடிவதற்குள் முழு நிலவாய்
வளர்ந்து விடுகின்றது
உன் வானில் தேய்ந்த என் காதல் !!!

Thursday, August 26, 2010

பாடுபொருளை பத்திரப்படுத்துங்கள்


* காமுகன் கை தீண்டி
அழிந்து போன பெண்ணின் உடல்

* கூரிய நகத்தால்
அறுந்து போன
வீணையின் நரம்பு

* கத்திரிக்கோலின் இடுக்கில்
இடிந்து விழுந்த ரோஜா

* அணைக்கட்டுகளில்
கால் ஒடிந்த ஆறுகள்

               பாடு பொருளை பத்திரப்படுத்துங்கள்

*இடைகள் உணர முடியாத‌
ஹிப்பிகள்

*ஓசோனில் ஓட்டை
சுவாசத்தில் கலப்படம்

*பேப்பர் பெட்டிகளில்
மரப்பிணங்கள்

*பிச்சைக்கும் வள்ளலுக்கும்
சரிவிகிதக்குறைவு

*இராத்திரியில் மாயம் காட்டும்
கடவுள் சிலைகள்

           பாடு பொருளை பத்திரப்படுத்துங்கள்

*உளியின் அஸ்திவாரத்தில்
சிமெண்ட் சிலைகள்

*அழும் அருவிக்கு
சிரிக்க சொல்லி கட்டளைகள்

*செயற்கைக்கோள் மறைத்ததில்
பௌர்ணமியில் கூட அரை நிலவு

*உக்கிரம் மிகுந்த சூரியன்
அழிக்க ஐந்தாண்டுத்திட்டம்

*விழ இடம் தேடி விதைகள்
விழுங்க நீர் தேடி நிலங்கள்

*அச்சிட்ட அட்டைக்குள்
பாசம் பத்திரமாய்

             பாடு பொருளை பத்திரப்படுத்துங்கள்

* நாளைய உதவிக்கு
இன்று செலவாகும் சிரிப்புகள்

* நிலங்களான குளங்கள்
கடல்களான நிலங்கள்

* காட்டில் நிழல் தரும்
கட்டிட மரங்கள்

* அனாதைகளாய் பெற்றோர்கள்

* இளைஞனை விட போகம்
அறிந்த யோகி

*கோட்சேவின் தலைமையில்
காந்தீய தொண்டர்கள்

* அமர்ந்த படி
வீர விளையாட்டுக்கள்

* கூண்டுகளின் பிடியில்
பறக்க முடியாத பறப்பன‌
ஊர முடியாத ஊர்வன‌
நகர முடியாத நடப்பன‌
அதையும் ரசித்தபடி
சில பார்ப்பன‌

* கவிஞ்கர்கள் எழுத்தைத் தூண்ட‌
மாத்திரையில் கற்பனைகள்

         பாடு பொருளை பத்திரப்படுத்துங்கள்

* இருளை ரசிக்க விடாத‌
மின்சார சிக்கனம்

* விடியலுக்கு முன்பே
விழிக்கும்
இயந்திர சப்தங்கள்

* மருத்துவர் யோசனைப்படி
ஏசி அறையில் எந்திரத்தில் ஓடும்
20 வயது இளைஞன்

* மரபு, புதுமை, ஹைக்கூ
தலைமையில் போர் புரியும்
தமிழ்கள்

* காதல் செய்ய‌
தனிமை தேடி தேடி
வயது கடந்த காதலர்கள்

* கழுவிய கை துடைக்க‌
மனைவியிடமிருந்து
பேப்பர் முந்தானைகள்

* விழாக்களில் போகி மட்டும்
பத்திரமாய்
 
         பாடு பொருளை பத்திரப்படுத்துங்கள்

Wednesday, August 25, 2010

செப்டம்பர் 11(இது மொழிபெயர்க்கப்பட்ட ஒரு குழ‌ந்தையின் அழுகை)


*எங்கிருந்து வந்தாய்
ஏரோப்பிளேனே?
எமனின் வாகனம்
அறிவிப்பின்றி
எப்போது மாற்றப்பட்டது?

பால்குடி மறவா
பாலகன் நான்
மறித்த அன்னையை
எப்படி மறப்பது?
*ஆணின் கருவறை ஈன்றதனால்
தாய்மை உனக்கு தெரியாது
என் புலம்பலின் சோகம் புரியாது

*அன்னை வைத்த அருமைப்பெயரை
அனாதை என மாற்றிவிட்டாய்
ஒற்றைக்கண்ணை உன்னிடம் இழ்ந்து
இன்னொரு கண்ணில் அழுகிறேன் நான்

*தன் குருதி மாற்றி
உணவு தந்து
என் குருதி வளர்த்தவள் தன்னை
நெருப்பால் தின்று
அரும்பு என் கொடி
அறுத்தது ஏனோ?

*தன் இரவுகளை
என் உறக்கங்களாய் சேகரித்து
நாளுக்கொன்றாய் நயமுடன் அளித்த‌
அன்னை மடிக்கு
இனி எங்கு போவேன்

பசிப்பதற்கு முன்பே
உணவு கண்ட வயிறு
இனி பசித்த பின்பும் பட்டினி

*என் ஒற்றை அழுகைக்குள்
பசி, தூக்கம், பயம், நோய்
என அர்த்தம் பல காண்பாயே
இன்றுதானம்மா உண்மையாய் அழுகிறேன்
என்ன அர்த்தம் என்று
உலகுக்கு கூறு

*உலகின் அத்துனை பேரையும்
அம்மா என்றழைத்தாலும்
உன்னைப்போல் அழைத்தவுடன்
அள்ளி எடுத்து
உச்சி முகர்வார் யாரம்மா?

* நீ இருந்த அருகாமையில்‍ -  இப்போது
என்னோடு இருப்பதெல்லாம்

அணைக்காத கைகள்
பயம் காட்டும் பார்வைகள்
விளையாடாத பொம்மைகள்
நீளாத உறக்கம்
நீண்ட நேர அழுகை
உனக்கே சொந்தமில்லாத என் அப்பா
புகைப்படத்தில் சிரிக்கும் நீ....

Saturday, August 21, 2010

மீண்டும் முதலிரவு*மீண்டும் முதலிரவு

*அவன் ஒரு பிள்ளை பெற்றவன்
நான் ஒரு பிள்ளை கண்டவள்

*கண்டதுதான் கொண்டதுதான்
புதியதில்லை
அவனுக்கும் எனக்கும்

*எப்படியோ முடிந்து முடிவில்
முட்டி நிற்கிறோம் முதலிரவில்

*முதலிரவு முடிந்த கையில்
 அழுது நிற்பான் அருமை மகன்

இரவுக்கான கனவுகளை விட‌
பகலைக்கான கவலைகளை
கசிந்தன கண்கள்

*நல்லவனோ? மன்மதனோ? வேறெவனோ?
ஏது செய்ய எப்படி தொடங்க‌
என்ன பேச எதை மறைக்க‌
எதுவும் புரியா மந்த நிலை
மந்தகாசம் ஏதுமிலை

*இடை பிடிக்கின்றான்
எல்லோர் முன்னிலையிலும்
என் கரம் பிடித்தவன்

*"என்னை பிடித்திருக்கிறதா?"
இவனும் கேட்கிறான்
கட்டிலில் கட்டி பிடித்தபடி
"இல்லை" என்றால் என்ன செய்வான் :)
மௌனத்தை பதிலாய் தந்தேன்
அவன் இறுக்கம் இளகி விடாதபடி

*கன்னியமாய் பேசுகின்றான்
கவிதைமொழி வீசுகின்றான்
மயில் தோகையேன விரலெடுத்து
மேனியெல்லாம் கூசுகின்றான்
நாளை என் செய்வானோ?

*ஒழுகும் மூக்கு சிந்த‌
மகன் முந்தி இழுப்பானோ
அவசர தேவையென அறையிலிருந்து
தந்தை தந்தி அடிப்பானோ

*முத்த மொழி பேசும் இதழ்
நாளை கழுதை என்று
கொஞ்சிடுமோ

*இனியதென இனிக்கும் குணம்
நாளை கனல் இரும்பாகி சுட்டிடுமோ

*கன்னத்தில் தூரிகையாய்
வரையும் விரல்
நாளை வேகம் கூட்டி அறைந்திடுமோ

*இரவில் உறங்க விடாமல்
கனவுகள் தருபவன்‍ நாளை
போதையில் தடுமாறி
என் நடுநிசி கனவில்
இடறி விழுவானோ

*நான் சிரிக்க சிரிக்க பேசுபவன் நாளை
அழ அழ ஏசிடுவானோ

*எதற்கும்
30ம் 60 மாய் நாட்கள் செல்லட்டும்
பிறகு சொல்கிறேன்
இறுதியாய் உறுதியாய்
அவன் எப்படி இருக்கிறானென்றும்
நான் எப்படி இருந்தவளென்றும்...

Friday, August 20, 2010

சொல்வது பொய்க்கட்டும்


* இனி வரும் காலத்தில்
அழைப்பேசியில் உரையாடலில்
தொலைபேசி குறுஞ்செய்தியில்
மின் அஞ்சலின் முடிவுரையில்
தூர தேச கடிதமொன்றில்
"இங்கு மழை இல்லை அங்கே?"
என்றிருக்கக்கூடும்

*தெருக்கள் இளைத்து
ஒற்றையடிப்பாதைகளை
நகரங்களும் அறியக்கூடும்

*பண்டிகைப்போதுகளில்
உடைந்த தொலைக்காட்சி
பித்தான்கள் மட்டுமே
குப்பைகளாய் தெருவில்
கிடக்கக்கூடும்

*காலையில் கூட‌
துணைக்கு வந்த நாயோடு
கடற்கரையில் கூட்டம்
அதிகமிருக்கக்கூடும்

*தற்கொலைக்கு முயல்வோர்
பேருந்து நெரிசலில் நசுங்கி சாவதென
முடிவு செய்யக்கூடும்

*சுவற்றுக்குள் வீடும்
வீட்டுக்குள் நிறைய சுவர்களும்
இருக்கக்கூடும்

*குடும்ப விழாக்களில்
உறவினர் வருகை
வாழ்த்து அட்டைகளில்
பதிவு செய்யக்கூடும்
பதிந்தவற்கே பதில் வாழ்த்து
பரிசீலிக்ககூடும்

*அன்பு மொழிகள்
அச்சிட்ட அட்டைகள் மூலமே
பரிமாற்றிக்கொள்ளக்கூடும்

*கயிறில்லா பந்தங்கள்
நவீனப்படவும்
துயரில்லா பிரிவுகள்
பெருகவும் கூடும்

*இதழில் முன்னுரையும்
நெற்றியில் முடிவுரையும்
காதல் முத்தங்கள் எழுதக்கூடும்

*சேலைக்குறைப்போடு
ஆடைக்குறைப்பும்
அதிகமிருக்கக்கூடும்

*பாடத்திற்கொரு வட்டப்பதிவேடு
இடம்பெயரும் கணிணி என‌
வெள்ளை எழுதுகோல் இல்லாமல்
பள்ளிகள் நாளை
பரிணாமம் காணக்கூடும்

*உயிலின் ஓர் பகுதி
மருத்துவர்க்கும் எழுதக்கூடும்

*குழந்தைகளுக்கு நிலாச்சோறு
நிலவிலேயே ஊட்டக்கூடும்
"செவ்வாயில் நிலம் வேண்டுமா?"
விளம்பரங்கள் வரக்கூடும்

*காடழித்து காடழித்து
நாட்டில் மிருகங்கள்
பெருகக்கூடும்

*புத்தனுக்கு போதி போல‌
மரணம் மட்டுமே
மனிதனுக்கு
ஞானம் தரக்கூடும்

* இனி வரும் காலத்தில்
அழைப்பேசியில் உரையாடலில்
தொலைபேசி குறுஞ்செய்தியில்
மின் அஞ்சலின் முடிவுரையில்
தூர தேச கடிதமொன்றில்
"இங்கு மழை இல்லை அங்கே?"
என்றிருக்கக்கூடும்

(இது என் கல்லூரிக்காலத்தில்
கிட்டத்தட்ட 2001ல் இயற்றப்பட்ட கவிதை)

சின்ன ஒலி*கண்ணே நின் நாவிருந்தும்
நழுவுகிற சொல் எல்லாம்
தமிழ்கொல்லன் வார்த்திட்ட‌
பொன் என்றே பூண்டு கொல்வேன்

*பண்ணென்ன பாட்டென்ன‌
உயிர் இழுக்கும் இசையென்ன
நின்கண் மீட்டுமொரு இராகமதை
யாரரிவார் நானறிவேன்

*உலகின் ஒளி காட்டும்
கண்ணுமணி நிறமென்ன?

கண்ணனவன் நிறமென்ன?

சின்ன ஒளி பதுங்கியிருக்கும்
கும்மிருட்டின் நிறமென்ன?

கேட்போர்க்கு நின் கூந்தல் நிறமென்பேன்
வேறு பெயர் நானறியேன்

*அடுக்கி வைத்த மின்னல் கூட்டம்
அழகான பல்வரிசை
மலர் கூம்பல் கொல்லும்
அதிசய நிமிடம்
இதழ்விரிந்த உன் சிரிப்பு

*சத்தங்களை நான் எழுப்பி
வீணை உன் நரம்பிழுப்பேன்
உன் சின்ன மூக்கால் மெல்லச்சிணுங்கி
சிறுகச் சிறுக செதுக்கு என்னை

*உன் பொன்முகம் ஒப்ப‌
உவமை சொல்ல‌
நிலவுக்கு ஏது முகம்
தெளிந்த தடாகம் எட்டிப்பார்க்க‌
உவமை கிடைக்கும்
தமிழும் பிழைக்கும்

*இதமாக உன் கையில்
சிந்தாமல் எனை ஏந்தி
புல்மெத்தை மடி தன்னில்
பனிபோல எனைத்தாங்கு
எனை மறந்த உறக்கத்தில்
உன் பொன் நினைவு உலாபோகும்
கனவேதும் கலையாமல்‍ - கலைந்த‌
என் கேசம் கோதி
மழழை என்னை கததப்பாக்கு
தாயே உறங்க வேண்டும்
இப்படியே
உன்னோடு உன் மடியில்!!!

Wednesday, August 18, 2010

"அவை" அல்ல "அது"உரு கொண்ட ஓர் நிழலாய்
அருகினிலே என் மனைவி
கவிதையின் கருவாய்
என் வாழ்வில் அவள்

நரை வந்து வீழ்ந்தாலும்
இவள் தளிர்குறையா
பருவமலர்
தேய்மானம் கொண்டதனால்
தங்கமென்ன கல்லின் இனமா

கண் ரெண்டும் கலந்த பின்னே
பிரிவைத்துற்ந்து
இல்லறம் திறந்தோம்

சோகமென்று வந்துவிட்டால்
என் கண்ணீர் நதி
கலப்பது அவள் கடலில்
அவள் நதியோ என் கடலில்
ஒற்றை மகிழ்ச்சி
இருமனம் சேர்ந்து
இரு மடங்காய்

நீதான் என் முதல் மனைவி
நீதான் என் இரண்டாம் மனைவி
முதலுக்கும் இரண்டுக்கும்
இடைவெளி ஒரு பிறவி

60 வயது மனதை அறுத்தது
நம் வீட்டு கடிகாரத்தில்
எமன் வரும் நேரம் எப்போதும் தெரிந்தது

முதல் பார்வை முதல் பேச்சு
முதல் முத்தம் முதல் உறவு
இன்னும் பல "முதல்" களை
கோர்த்த முத்தாய் காத்த உள்ளத்து ஓரம்
முதல் "கடைசியாய்"
ஒட்டிக்கொண்டது
மரணபயம்

கஷ்டமேதும் தந்திராத
என் இஷ்டமான அபிமானி
பெண்மைக்கே முதன்மை என்று
உரிமை  நீ  கோராதே
தனிமையின் அறிமுகம்
நீ எனக்கு செய்யாதே
மாறாக நடந்திடுமோ
ஐயகோ வேண்டமடி
உன் அழுகை கேட்க‌
எரியும் என் சிதையும்
எழுந்து வரும்...

கட்டி அணைத்தபடி
"முதல்"களை மீண்டும்
தூசு தட்டுவோம்
ஒட்டுச்செடி போல‌
ஈருடல் மறந்து
ஓருடலாய் இருப்போம்
வரும் மரணம்
நமை
"அவை" எனக்காணாது
"அது" என காணட்டும்...

பிறப்புக்கு ஒப்பாரி


*ஏலேய்! முத்தையா
நீ கட்டிவந்த பொட்டக்கழுத‌
பொட்டப்புள்ள ஈந்திருக்கா...

ஆண் வாரிசு வர்க்கமுன்னு
ஊரு உலகம் நம்மத்தான்
வாயர புகழ்ந்திருக்கு
கண்ணு கோடி வச்சிருக்கு!

*திருஷ்டி வச்சது போல்
பொட்டபுள்ள ஈந்து புட்டா
வலக்கால வக்கிமுன்னே
இடக்கால வச்ச மக!

*அவ வாந்தி எடுத்தப்போ
பேரப்புள்ள வந்ததேன்னு
நான் மயங்கி விழுந்தேனே...

புள்ள நல்லா வளரணுமின்னு
தெனந்தெனந்தான்
நெல்லுச்சோறு ஆக்கிவச்சேன்!!!
நெஞ்சுமேல அவன் மிதிக்க‌
ஒடம்ப கொஞ்சம் தேத்தி வச்சேன்!!!

சாரலோட வந்த மழை
இடியோட விட்டுடிச்சே...

விருட்ச‌முன்னு நெனச்சேனே
விசமாகப்போயிருச்சே...

செலவ இவ பெத்துப்போட‌
செலவு நான் செய்வேனா

*ஒங்கப்பன் சொத்துன்னு
ஒடிஞ்சுபோன நான் இருக்கேன்
ஒடியப்போர நீ இருக்க

ஒரு டம்ளர் பால் கொடுக்கும்
காளக்குட்டி ஈந்த சனியன்
கரவமாடு ஒன்னிருக்கு

*விறகு இல்லேன்னு
கதவா ஆன மரத்த
ரெண்டாம் முறையா வெட்டிவெட்டி
விறகெடுத்து அடுப்பெரிச்சேன்

கன்னம் வைக்கும் கஷ்டம் இல்லேன்னு
கள்ளனே வந்தாலும்
மவராசன் இட்டு வந்ததிலே
இங்க கொஞ்சம் விட்டு போனாதான் உண்டு

எத‌ வித்து
உம்மகள நீ தொலப்ப‌

*வேண்டாம்டா வெறும்பயலே
தாய்ப்பாலு சொரக்குமுன்னே
கள்ளிப்பாலு ஊத்திருடா
பொழச்சாலும் பொழச்சுக்குவா
நெல்லு ரெண்டு கொழச்சு வாடா

குருத்து கொன்ன பாவத்தீய‌
பொதச்ச இடத்தோரம்
குருத்து ஒன்னு நட்டு வச்சு
தண்ணி ஊத்தி தணிச்சுக்கலாம்...


* * * * * *

சொன்னதெல்லாம் வார்த்தயில்ல‌
உசிரறுக்கும் வாளுன்னு
மயங்கி தெளிஞ்சு
தெளிஞ்சு மயங்கி
ஒரு தாய்மை தீப்பிடித்தது

* * * * * *

*ஏண்டி மவளே இங்க வந்த‌
 என்னோட வயித்துக்குள்ள‌
 உன்ன குடி வச்சானே
 குடிகார உங்கப்பன்
 குடிகெடுக்க வந்தவன்னு‍ ஒன்ன‌
 கொன்னு  கொல்லயில் போட‌
 அடி எடுத்து வச்சிபுட்டான்
 ஆத்தா சொல்லுக்கு
 புடி கொடுத்து உட்டுபுட்டான்

ஏண்டி மவளே இங்க வந்த‌

*பத்து மாசங்கூட‌
 மழுசாக வாழாம‌
 மூணுமாசம் முன்னாடி
 முந்திக்கிட்டு வந்ததெல்லாம்
 முணுமுணுக்க முயலும்போதே
 முடங்கி நீ போறதுக்கா

*ஆத்தா மொகம்பாக்க
 அவசரமா வந்தவளே
 ஆத்தா வலி புரிஞ்சி
 அழுதுகிட்டே பொறந்தவளே
 சீரழியும் கத கேட்டும்
 சிரிச்சுகிட்டே இருப்பவளே

ஏண்டியம்மா இங்க வந்த‌

*கள்ளிக்குருத்தோரம் லேசாக கருத்திருக்காம்
 உரமாக ஓன் உசுரு
 ஒப்படைக்க போராக‌
 மறுபடியும் சொமந்தாலும்
 மகராசி ஒனப்போல‌
 மக எப்ப நான் சொமப்பேன்

கம்போட நிக்கும்போது
பாம்பு சீறி என்ன பண்ண‌


அழுது வக்கிறேண்டி
ஒனக்காக சொரந்த பால‌
கண்ணீரா கக்கறேண்டி


அறுந்த தொப்புள் கொடி
ஓன் நினைவா வக்கிறேண்டி...

Wednesday, June 30, 2010

கண்கள் பேசும் கணங்கள்


* மூச்சுக்காற்றில் ஆடை விலகும்

* தொட்டால்சிணுங்கி ஆகும் உடல்
சினுங்கினும்...
விடாது விரல்கள் வேகம் கூட்டும்
உடலே பெய்து உடலே நனையும்
வியர்வை மழையில்
தகிக்கும் உடல்கள் தாகம் தீர்க்கும் ...

வியர்க்கா இதழை இதழ்கள் நனைக்கும்
சுவைகள் புதிதாய் நாவில் இனிக்கும்

* தடாகம் தொலைத்த
தரைமீன் போலே
இயல்பை மறந்து
இதயம் துடிக்க
நகக்கண் எல்லாம் கவிதை படிக்கும்

* உடலோடு மோதி இதழ்கள்
முத்த தாளம் போடும்
சிணுங்கி மெல்ல முனகி குரல்கள்
ஒத்திசைந்து பாடும்

வழியா? இன்பமா?
புரியாது போகும்

உள்ளங்கைக்குள் முடிந்து வைக்க - முனைந்து
முடிவில் முடியாது போகும்

* வழி மறந்த இதழ்கள் வந்து
காமன் கதைகள் கழுத்தில் சொல்லும்
கேட்காது ஆயினும்
கழுத்தும் கேட்கும்

* முடி இழுத்து வலி கொடுக்கும்
வழி கொடுத்து இடை துடிக்கும்
போதும் என்றே உடல் மடை உடைக்கும்
இறகென பறந்த உடல்
தரை இறங்கும்

* சேறு அடங்கிய நீராய்
அகம் தெளியும் - பிறகுதான்
தெளிவாய் அவரவர் முகம் தெரியும்
முன்னை தெரிந்த அழகில்
சின்ன குறை தெரியும் - ஆயினும் என்ன
அரைமணி போதும் குறை மறையும்
களங்கம் இல்லா பிறை தெரியும்!!!

Tuesday, June 22, 2010

நாளை ஒன்று நாளும் உண்டு


*குருவிகள் கட்டிய கூடு
குருவிக்கு சொந்தம் இல்லை
நாங்கள் கட்டிய கூடு
எங்கள் சொந்தம் இல்லையா
நாங்கள் என்ன குருவிகளா?

*கூடுவிட்டு கூடு கட்டி
கூடி வாழ குருவிகளால் ஆகும்
தாய் வீடு விட்டு நாடு நகர்ந்து
அலைச்சத்தமும் அழுகைசத்தமும்
மறந்து வாழ அகதிகளால் ஆகுமா?

*பதுங்கு குழியின் இரண்டு நாள் இருட்டில்
கவனம் கலையாத அன்னையின் சீலைப்போர்வை
தந்த பாதுகாப்பை...

ஒளிபுக முடியா நெருக்கத்தில்
சகோதரனின் வேர்வை தந்த குளிரை...

சிறுநீர் கழிக்க உயிரை பணயம் வைத்த
தகப்பனின் வருகைகேங்கும் மனதை...

காலை கட்டிலாக்கி
கால் மயிரை மெத்தையாக்கி
மேல் சட்டையை காற்றாடியாக்கி
மாமன் தந்த உறக்கத்தை ....

சிறு துளை கீற்று வெளிச்சத்தில்
எனக்கான பார்வைகள் தேக்கி
காத்திருந்த அவள் கண்களை...

மீட்டுத்தருமா போர்!!!

*நித்தம் நிகழும்
உயிர்பலிகளின் இலக்கங்களில்
பொய்கள் சொல்லி இலக்குகளை எட்டுவதாய்
எங்களை புறந்தள்ளி
போர்முனை மட்டும் போனது எங்கே???

*பதுங்கு குழி வாழ்வை மாற்ற
பலியாவதும் புலியாவதும்தான்
நாங்கள் உற்ற ஒற்றை வழி
பழி சொல்லும் நாடுகளுக்கு எங்கள்
வலி உணரும் புலன்கள் இல்லை...

*பங்கர் குண்டு, வெண்பாஸ்பரஸ் மழை,
கண்ணிவெடி, கொதுக்குண்டு, க்ளஸ்டர்
வெள்ளைவேனில் தொலைந்து போன ஆண்கள்
கொல்லைபுறத்தில் கற்பிழந்த பெண்கள்
இதை நித்தம் நீங்கள்
படித்து மறந்து போகிறீர்
இதில் நித்தம் நாங்கள்
இதயம் துடிக்க மறந்து வாழ்கிறோம்!!!

*குணம் பிளன்ர கொதபாய் - ஓர்
இனம் அளிக்க உரை கொண்டால்
சினை கொள்வோம் மீண்டும் மீண்டும்
சினம் கொள்வோம் யாண்டும் யாண்டும்
சிறை கொள்வோம்
இலங்கை சுற்றம் கரை கொள்வோம்

*பதைபதைத்து இறந்த உடல்
பதியுங்கள் குழி பறித்து
விதைபோல விழித்தெழுவோம்
பறைசாடி கதைத்திடுவோம்

இருள்வதால் முடியாது
இரவியின் கதை என்று...

Saturday, June 5, 2010

எழுதாத கவிதை*காதல் தந்தது நீதான்
நான் பெற்றதுதான்
தெரியாதுனக்கு...

*களவு கற்றவள் போலே
இதயக்கன்னம் இட்டது நீதான்
உளவு கண்டு உரைத்திட்டேன்
எனக்குள் மட்டும்.

*உலை தொட்ட மெழுகாக
நிலை குழைந்தவன் நான்தான்
பிழை இங்கு என்னவெனில்
சிலையான நீதான்
உளையானாய் என நீ
அறியாமல் போனாய் !!!

*என்னை களவாடி சென்றவள் நீதான்
என் கடவுச்சொல் ஆனாய்!!!

*அழகான நதி போலே
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
கரையாக உன்னை நான்
தொடர்வதை அறியாமல் ...

*காதல் சொல்லாத என் நிலையை
சொல்லி நீ நகைக்கலாம்
படித்து நீ கிழிப்பதற்கு
எழுதப்படாமலேயே இருக்கட்டும்
என்
காதல் கவிதை...
Related Posts with Thumbnails