காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Tuesday, October 30, 2007

கவிஞனாக வேண்டுமா?

*உன் பார்வையின் நீளம் விரி!

*அறிமுக‌ம‌ற்ற‌வ‌னின் இற‌ப்புக்கும்
அழுக‌ க‌ற்றுக்கொள்!

*துன்பமோ... இன்ப‌மோ...
சுவ‌ர்க்கமோ... ந‌ர‌க‌மோ...
இன்னதோ... இன்னாதோ...
புல‌ன்க‌ள் இல்லாவிட்டாலும்
எல்லாம் அனுப‌வி!

*நூலைத் திரிக்கும் போது
நீ அறுந்து போ!

*ம‌ல‌ர்கூட்ட‌ம் இருந்தாலும்
நீ ம‌ண‌க்க‌ முய‌ற்சி செய்!

*மூத்த க‌விக‌ளை துரோண‌ராய் ஏற்று
நீயும் துரோண‌ராய் இரு!

*குளிர் அறைக்குள்
விய‌ர்க்க க‌ற்றுக்கொள்!

*ச‌ராச‌ரிக்கும் குறைவாக‌வே
இமைக்கப் ப‌ழ‌கு!

*ப‌னியை உடைக்கும்
க‌லையை க‌ல்!
சூரிய‌னை அடைகாக்கும்
அற்புத‌ம் அறி!
அதீத‌த்தில் எளிமை சேர்!
எளிமையில் அதீத‌ம் சேர்!

*இய‌ற்கையோடு பேசும்
ப‌ரிபாடை க‌ற்றுக் கொள்!

*வெள்ளை நிற‌மா நீ
சீக்கிர‌ம் க‌ருப்பாகு
பெரும்பாலான ந‌ற்க‌விக‌ள்
க‌ருப்பு நிறம்தானாம்...

*இர‌வின் நூல்பிரித்து
விடிய‌ல் செய்!
விடிய‌லின் கண்பிடுங்கி
இர‌வு செய்!

*நித்த‌ம் க‌ற்ப‌மாகும்
பூமிக்கு பிர‌ச‌வ‌ம் பார்!

*உன் ப‌டைப்புக‌ளின்
முத‌ல் ர‌சிக‌ன்
முத‌ல் விம‌ர்ச‌க‌ன் நீயாயிரு!

*நினைவுகொள்
க‌ம்ப‌னின் முத‌ல் ப‌டைப்பே
இராமாய‌ண‌ம் இல்லை!!!

*உன் கைகளுக்குள் வான‌ம் அட‌க்கு
ஒரு ப‌னித்துளிக்குள் நீயும் அட‌ங்கு!

*உன் பேனாவின் பிர‌ச‌வ‌ வ‌லியை
ப‌டிப்ப‌வர் உண‌ர‌ எழுது!

*ஞான‌ம் வேண்டுமா பாதிரியாகு
காம‌ம் வேண்டுமா பாவியாகு
விடுத‌லை சொல்லில் பார‌தியாகு
உன் பேனாவின் அரிதார‌ம்
அடிக்க‌டி மாற்று!!!

தாயாய்... சேயாய்...
ம‌லையாய்... ம‌டுவாய்...
உன‌க்கு நீயே ந‌ண்ப‌னாய்...
உன‌க்கு நீயே எதிரியாய்...

எல்லாமாய் இரு
ஆனால் "நான் க‌விஞன்" என்ற‌
நினைப்பு ம‌ட்டும்
ஒருபோதும் கொள்ளாதே!!!
Related Posts with Thumbnails