காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Friday, August 20, 2010

சொல்வது பொய்க்கட்டும்


* இனி வரும் காலத்தில்
அழைப்பேசியில் உரையாடலில்
தொலைபேசி குறுஞ்செய்தியில்
மின் அஞ்சலின் முடிவுரையில்
தூர தேச கடிதமொன்றில்
"இங்கு மழை இல்லை அங்கே?"
என்றிருக்கக்கூடும்

*தெருக்கள் இளைத்து
ஒற்றையடிப்பாதைகளை
நகரங்களும் அறியக்கூடும்

*பண்டிகைப்போதுகளில்
உடைந்த தொலைக்காட்சி
பித்தான்கள் மட்டுமே
குப்பைகளாய் தெருவில்
கிடக்கக்கூடும்

*காலையில் கூட‌
துணைக்கு வந்த நாயோடு
கடற்கரையில் கூட்டம்
அதிகமிருக்கக்கூடும்

*தற்கொலைக்கு முயல்வோர்
பேருந்து நெரிசலில் நசுங்கி சாவதென
முடிவு செய்யக்கூடும்

*சுவற்றுக்குள் வீடும்
வீட்டுக்குள் நிறைய சுவர்களும்
இருக்கக்கூடும்

*குடும்ப விழாக்களில்
உறவினர் வருகை
வாழ்த்து அட்டைகளில்
பதிவு செய்யக்கூடும்
பதிந்தவற்கே பதில் வாழ்த்து
பரிசீலிக்ககூடும்

*அன்பு மொழிகள்
அச்சிட்ட அட்டைகள் மூலமே
பரிமாற்றிக்கொள்ளக்கூடும்

*கயிறில்லா பந்தங்கள்
நவீனப்படவும்
துயரில்லா பிரிவுகள்
பெருகவும் கூடும்

*இதழில் முன்னுரையும்
நெற்றியில் முடிவுரையும்
காதல் முத்தங்கள் எழுதக்கூடும்

*சேலைக்குறைப்போடு
ஆடைக்குறைப்பும்
அதிகமிருக்கக்கூடும்

*பாடத்திற்கொரு வட்டப்பதிவேடு
இடம்பெயரும் கணிணி என‌
வெள்ளை எழுதுகோல் இல்லாமல்
பள்ளிகள் நாளை
பரிணாமம் காணக்கூடும்

*உயிலின் ஓர் பகுதி
மருத்துவர்க்கும் எழுதக்கூடும்

*குழந்தைகளுக்கு நிலாச்சோறு
நிலவிலேயே ஊட்டக்கூடும்
"செவ்வாயில் நிலம் வேண்டுமா?"
விளம்பரங்கள் வரக்கூடும்

*காடழித்து காடழித்து
நாட்டில் மிருகங்கள்
பெருகக்கூடும்

*புத்தனுக்கு போதி போல‌
மரணம் மட்டுமே
மனிதனுக்கு
ஞானம் தரக்கூடும்

* இனி வரும் காலத்தில்
அழைப்பேசியில் உரையாடலில்
தொலைபேசி குறுஞ்செய்தியில்
மின் அஞ்சலின் முடிவுரையில்
தூர தேச கடிதமொன்றில்
"இங்கு மழை இல்லை அங்கே?"
என்றிருக்கக்கூடும்

(இது என் கல்லூரிக்காலத்தில்
கிட்டத்தட்ட 2001ல் இயற்றப்பட்ட கவிதை)

சின்ன ஒலி*கண்ணே நின் நாவிருந்தும்
நழுவுகிற சொல் எல்லாம்
தமிழ்கொல்லன் வார்த்திட்ட‌
பொன் என்றே பூண்டு கொல்வேன்

*பண்ணென்ன பாட்டென்ன‌
உயிர் இழுக்கும் இசையென்ன
நின்கண் மீட்டுமொரு இராகமதை
யாரரிவார் நானறிவேன்

*உலகின் ஒளி காட்டும்
கண்ணுமணி நிறமென்ன?

கண்ணனவன் நிறமென்ன?

சின்ன ஒளி பதுங்கியிருக்கும்
கும்மிருட்டின் நிறமென்ன?

கேட்போர்க்கு நின் கூந்தல் நிறமென்பேன்
வேறு பெயர் நானறியேன்

*அடுக்கி வைத்த மின்னல் கூட்டம்
அழகான பல்வரிசை
மலர் கூம்பல் கொல்லும்
அதிசய நிமிடம்
இதழ்விரிந்த உன் சிரிப்பு

*சத்தங்களை நான் எழுப்பி
வீணை உன் நரம்பிழுப்பேன்
உன் சின்ன மூக்கால் மெல்லச்சிணுங்கி
சிறுகச் சிறுக செதுக்கு என்னை

*உன் பொன்முகம் ஒப்ப‌
உவமை சொல்ல‌
நிலவுக்கு ஏது முகம்
தெளிந்த தடாகம் எட்டிப்பார்க்க‌
உவமை கிடைக்கும்
தமிழும் பிழைக்கும்

*இதமாக உன் கையில்
சிந்தாமல் எனை ஏந்தி
புல்மெத்தை மடி தன்னில்
பனிபோல எனைத்தாங்கு
எனை மறந்த உறக்கத்தில்
உன் பொன் நினைவு உலாபோகும்
கனவேதும் கலையாமல்‍ - கலைந்த‌
என் கேசம் கோதி
மழழை என்னை கததப்பாக்கு
தாயே உறங்க வேண்டும்
இப்படியே
உன்னோடு உன் மடியில்!!!
Related Posts with Thumbnails