காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Friday, June 20, 2008

பண்பாடு

* பண்படுதலுக்கான நெறிமுறைகள்
நாகரீக வளர்ச்சியின் அடிப்படைகள்
வாழ்வியலின் விதிமுறைகள்
தேசத்தின் கடமைகள்
அனைத்திற்கும் ஓர் பெயர்தான் பண்பாடு

*காதல், திருமணம்
இல்லறம், குடும்பம்
கல்வி, தொழில்
கலை, இலக்கியம்
இன்னும் எல்லாம்
பண்பாட்டின் அங்கங்கள்

*வீதியில் பார்த்தால் அரிவாள் வெட்டு
வீடு தேடி வந்தால் வெட்ட ஒரு விருந்து இது
பகைவனுக்குமான நம் பண்பாடு

*பாரதியே ஆனாலும்
தாலியின்றி மனைவியில்லை
இல்லறத்தின் பண்பாடு

*சுவற்றில் அல்லாது
சுவர்களுக்குள் வரைதல்
காதலின் பண்பாடு

*உழுமண் உழுது
உழுவேர் கட்டி
வியர்வையிலே நே பாய்ச்சி
ஊர் உண்ண உழைத்து வாழ்தல்
இயற்கையினை வாழ்த்தி வாழ்தல்
உழவர்தம் பண்பாடு

*கொற்றவனே ஆனாலும்
சட்டம் பொது என்பதுதான்
நீதியின் பண்பாடு

*தன்னலத்தை போற்றி நின்றால்
தனித்தெய்வம் நன்று
மனதில் எண்ணி வணங்கி நின்றால்
இறைவன் அவன் ஒன்று
இறையாண்மையின் பண்பாடு

*நோயுற்ற மிருகம்
கொல்வதில்லை வேட்டையின் பண்பாடு
மக்கள் நலன்
காப்பதிங்கே கோட்டையின் பண்பாடு

*கற்கும் கல்வி
தெளிந்தறிதல் மாணவர் பண்பாடு
தெளியும் படி
தெரிவித்தல் ஆசிரியர் பண்பாடு

*நிகழ்காலம் பத்வித்தல்
வரும்காலம் புதுப்பித்தல்
நற்கலையின் பண்பாடு

*தன்னொழுக்கம் தன்மானம்
தன் கடமை தன் பெருமை
சிதையாத வாழ்வே
சிறப்பான் வாழ்க்கை என‌
பிறர் போற்ற வாழ்தல்
மானுடப்பண்பாடு

*இடும் தொட்டிலில் தொடங்கி
இடுகாட்டில் இடும் வரை
வரும் இசைப்பண்பாடு

உடலசையா நேரத்திலே
இசையொத்த விரலசைவும்
நடனம்தான் இது
வரலாறு வளர்த்த‌
வரலாற்றை வளர்த்த‌
உன்னத பண்பாடு

*ஞானம் தேடி
கண்களில் பசித்திருத்தல்
கிடைத்தால் மட்டும்
வயிற்றுக்கு புசித்திருத்தல்
உண்மை ஊருக்கு உரைத்திருத்தல்
துறவியின் பண்பாடு

ஆனால்

*அலங்கார மண்டபத்தின்
ஆடமபர அறைகளில்
சிறுதுளி போலே சிதறும்
ஒளி ஊடே தொலைகிறது பண்பாடு

அங்கே
இறைத்து கொட்டும்போது
மொத்தமாய் விழும் நீர் போலே
பொத்தென விழும் இசை இறைச்சலில்
இறந்துபோன பண்பாட்டிற்கு
இரவு முழுவதும் வழ்ங்கப்படுகிறது
இறைச்சல் அஞ்சலி

*தீவிரவாத தாக்குதல்களில்
சிதிலமைடகிறது பண்பாடு

*உடலில் இருந்தும்
தெரியாத உடைகளால்
துகிலுரிக்கப்படுகிறது பண்பாடு

*கட்டப்படாத வேட்டிகளில்
கட்டத்தெரியா சேலைகளில்
கட்டுண்டு கிடக்கிறது
பண்டைய பண்பாடு

*முதியோர் இல்லத்தின்
மூலை விசும்பல்களால்
குழந்தை காப்பகத்தின்
அழும் குரல்களால்
வசைபாடப்படுகிறது
வனப்பிழந்த பண்பாடு

*மம்மி டாடிக்களில்
தொலைந்து போன‌
அப்பா அம்மாக்களை
தேடி அலையும்
கன்வென்ட் குழ்ந்தைகளிடம்
கலங்கி நிற்கிறது பண்பாடு

எனினும்...

*விண்வெளி தாண்டிய‌
விஞ்ஞான விடியலில்
கடலின் ஆழம் ஆர்க்கும்
ஆழ்ந்த அறிவியலில்...

மதம் கரைத்து
மனம் குழைத்து
உயிர் வளர்க்கும் காதலில...

இருநாட்டு வெண்கொடியின்
இதமான மோதலில்...

தீண்டப்படாத தீண்டாமையில்...்

நோய் குறைக்கும் விழிப்புணர்வில்
நோய் தீர்க்கும் மருத்துவத்தில்....

கைம்பெண் மறுமண்த்தில்
முதிர்கன்னி விடுதலையில்
வரதட்சணை கைதுகளில்...

சிறுநூல் தறித்து உருவான‌
பெண்ணடிமை நோஞ்சான்
கூடுகளை உடைத்து வீழ்த்துவதில்....

எல்லோர்க்கும் கல்வி
எனும் நிலையில்....

*தழைக்கிறது சமூகம்
உயிர் பிழைக்கிறது பண்பாடு!!!

Tuesday, May 13, 2008

க‌ரை தொலைத்த‌ ந‌தி!!!

*அதிகம் பேசுவதில்லை மலர்கள்
இதழ் விரிந்த புன்னகையில்
கவனம் ஈர்க்கும்
பறிக்கும் ஆசையில்
பக்கம் வரும்போது
உதிர்ந்து விடுகிறது
உன்னைப்போலவே...

*உன் மௌனத்திற்கு
அர்த்தம் கொடுக்க முயலுகையில்
பேசிவிடுகிறாய்
உன் பேச்சுக்கு செவிசாய்க்கும் போது
மௌனமாகிறாய்.....

*சொட்டும் மழை இரவில்
மின்னல் தரும் நிமிடப்பகலில்
தெரிந்து மறைகிறது
உன் பொன்முகம்

மறக்க முயன்று
தோற்கும் தருணங்களில்
சிரிக்கிறாய் நீ இன்னும் அழகாய்
தோற்கும் முனைப்பில்
மறக்க முயல்கிறேன் மீண்டும் நான்...

*நிலவு என்றேன் உன்னை
என் வானம் என்பதற்காக‌
தேய்பிறை ஆகிறாய்
எப்போதும் நீ...

*கடின சூட்சமத்தை
கண்டு கொள்வாய் மிக எளிதாய்
நீட்டும் என் காதலை மட்டும்
கவிதை என்று கைதட்டுவாய்...

Sunday, May 11, 2008

அம்மா

*கேட்காமலே வரங்கள் தரும்
கண் தெரிந்த‌
தெய்வம் நீ...

*அருவாம் என்னை
கருவாக்கி உருவம் தந்தாய்...

*உன் பொன்மடி தொட்டிலில் தூங்கி
உன் கண்ணிரண்டில் எனை தாங்கி
ஒரு புள்ளி என்னை பிள்ளையாய் செய்த‌
புவி வாழும்பிரம்மன் நீ...

*விழுகிற போது விழுந்து
நான் எழுகிற போது தவழ்ந்து
என் நிழலையும் தாங்கி
உரு கொண்ட நிழலாய்
என்னோடு இருப்பவள் நீ...

*எங்கோ எதிலோ நானே
சிறு அடிகள் பட்டால்
உடனடி மருந்தாய்
இதழில் நீ வருவாய் அம்மா...

*தவறுகள் நிறைய புரிவேன்
அது தெரிந்தும் கூட‌
எனக்கென வாதம் புரியும்
என் வக்கீல் நீ...

*எங்கோ நான் உனை எண்ணி அழுதால்
உன் கண்கள் நீர் வடிக்கும்
என் காலில் முட்கள் தைத்தால்
உன் காலில் விழுப்புண் வரும்

*முத்த எச்சிலில் குளிப்பாட்டி
உன் சேலைத்துண்டிலே தலை துவட்டி
த‌லைவ‌லி வாட்டும் என‌ சொல்லி
உன் விர‌ல் சீப்பால் என் த‌லை சீவி
உட‌ன் ஊர்க‌ண் ப‌டுமென‌ உன் க‌ண் பிடுங்கி
திருஷ்டி தில‌க‌ம் இடுவாய் அம்மா...

*ந‌ண்ப‌க‌ல் வெயிலில் கூட‌
என் விழிக‌ள் காணும்
முழும‌தி நில‌வும் கூட‌
உன் முக‌ம்தான் அம்மா...

*ஆண்ட‌வ‌ன் ப‌டைப்பில் பொதுவாய்
ஒரு இத‌ய‌ம் தானே
என‌க்கென‌ வெளியில் துடிக்கும்
மறு இத‌ய‌ம் நீ...

*ப‌ஞ்ச‌னை மெத்தை எல்லாம் இருந்தும்
க‌ண் சேரா என் தூக்க‌ம்
எலும்புக‌ள் குத்தும்
உன் ம‌டி சேர்ந்தால்
உட‌னே என் விழி சேரும் அம்மா...

*புவிக்கென‌ அழுகும் ம‌ழை போல‌
உன் க‌ண்க‌ளும் என‌க்கென‌ அழுதிடுமே
புவிய‌து ம‌றுப‌டி அழுவ‌தில்லை
நான் அப்ப‌டி இருக்க‌ விரும்ப‌வில்லை
மறுபிற‌ப்பில் என் ம‌க‌ளாய் பிற‌ந்திடு
உனை என்றும் நான் சும‌ப்பேன்
உன‌க்கென்று காத்திருப்பேன் அம்மா...

Sunday, March 30, 2008

இஷ்மாயிலின் மூக்குக்கண்ணாடி

* தூங்கும் உன் கைகள்
இல்லாமலே
களைகிறதென் நடுநிசி உறக்கம்

* இனி அதிகாலைத் தேனீர்
என்னை ம‌ட்டும்தான் எழுப்பும்

* எழுந்த பின்னும்
தொட‌ர்ந்து உற‌ங்க‌
அறையில் இனி ஆள் இல்லை

* அனாதை என
யாரும் எனை சுட்டியதில்லை
உன் மரணம் தவிர!!!

* அறையில் என்னுடன் பேச‌
அழைபேசி தவிர‌
யாருமில்லை இஷ்மாயில்...

* நகம் கடித்தல் பிடிக்காதெனக்கு
இப்போதெல்லாம்
கடித்துவிழும் என் கட்டைவிரல் நகம்
நகைக்கிறது அழகாய் உன்னைப்போலவே!

* கலைப்படுத்தியும் அழகு சேர்ப்பதாயில்லை
கலைத்துப்போடும் நீ இன்றி
அறையில் பொருட்கள்

* உள்ளிருக்கும் உன்னால்
தெளிக்கப்படாத நீரால்
பாலையாகி விட்ட‌து
குளிய‌ல‌றை வாச‌லில் த‌ரை

* நீ இற‌ந்து போனாயா
என‌க்குள் நீயாய் புதைந்து போனாயா
குழ‌ம்புகிறேன் இஷ்மாயில்...

* என்றுமே ம‌ற‌க்க‌ மாட்டாய்
ஆனால்‍‍‍‍‍‍ அன்று ம‌ட்டும்
நீ ம‌ற‌ந்த‌ உன் மூக்குக்க‌ண்ணாடி ‍
என்றுமே ம‌ற‌க்க‌ முடியாத‌ உன் நினைவுக‌ள்
இர‌ண்டினோடும்
இன்னமும் வாழ்கிறேன் நான்!
Related Posts with Thumbnails