காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Tuesday, November 13, 2007

வேலையில்லாத் திண்டாட்டம்

*நாங்கள் வேலை தேடுவதையே
வேலையாகக் கொண்டுள்ள‌
இருபத்தோராம் நூற்றாண்டின்
இணையற்ற இளைஞர்கள்

மக்கள் தொகையில்
பாதி எங்கள் தொகை
யார் இட்ட சாபமோ
வேலைக்கும் எங்களுக்கும்
ஏனோ ஓர் பகை
ஐ.நா தலையிட்டாலும்
தீராது இந்தப்பகை

*எங்க‌ள் வாழ்வு
வேலை தேடும் ப‌ட‌ல‌த்தை
பெரும் பகுதியாக‌க் கொண்ட‌
இன்னொரு இதிகாச‌ம்...

*இந்தியாவின்
எதிர்கால‌த்தூண்க‌ள்
க‌ட்டிட‌ம் இன்றி
காற்றைத் தாங்கிய‌ப‌டி...

*காளையின்
க‌ண்ணில் நிறைந்திருக்கும்
காதலியின் முகம் போல‌
எங்கள் கண்ணில்
"வேலை காலி இல்லை"...

*எங்கள்
தேடுதல் வேட்டையில்
மாய்வதென்னவோ
நாங்களேதான்...

*அடிமாடாய் ஆவதற்கும்
அருகதை அற்றவராய்
எங்கள் கண் வேலை தேட‌
வெய்யில் கண் பட்டுப்பட்டு
வெந்துபோன நாங்கள்தான்
மண் வாய்க்கு நேர்ந்து விட்ட‌
"தண்டச்சோறுகள்"!!!

*வேலைத்தேடும்
எங்களைத்தேடி
அமைப்பாய் செய்து
உறுப்பினர் அனைவரும்
ஒன்றாய்க்கூடி
அமைப்பிற்கொரு பெயர்
அழுதபடி வைத்தோம்
"தொலையாத
பொருளைத்தேடி
தொலைந்த கூட்டம்"
என்று...

* * * * * * * * * * *

இளைஞனே எழுந்திரு!
பட்ட அடிகள்
வலிக்கும் முன்னே
எழுந்திரு!

*அஸ்தமனித்த சூரியன்தான்
மீண்டும் உதயமாகிறது
*பகலில் கதிரால்
மறைக்கப்பட்டாலும்
இரவில் குளிர்தரும்
நிலவைப்போல‌
உன்னாலும் முடியும்‍‍ எழுந்திரு...

*விதையாய் ஒருநாள் இருப்பதுதான்
விருட்சமென ஒருநாள் புகழ்பெறும்
நம்பிக்கை விதையை உன்னுள்
விதைத்தால்
அது
விருட்சமென வளர்வது நிச்சயம்...

*தேவையற்றதை அகற்றினால்
பாறைகூட சிலையாகும்
உன்னையே சிற்பியாக்கி
நீயே சிலையாகு...

*உழைக்கத் தெரிந்தவனுக்கு
எதுவும் தொழில்

இளைங்கனே எழுந்திரு...

*கொடியை பிடித்தபிடி
விடாததால்
அந்த குமரனின்
பெயரும் நிலைத்தது

கொள்கையை பிடித்தபிடி
விடாததால் காந்தியை
மகாத்மா என உலகம் உதைத்தது

பாரதி இளைஞனின்
கவிதை வரிகள்
விடுதலை வேள்வியை
மூட்ட வில்லையா?

ஆம்ஸ்ட்ராங் இளைஞன்
விண்வெளி சென்று
நிலவில் கல்லை
காட்டவில்லையா?

*தூணே! உனக்கேன்
கட்டிடத் துணை
வேலை தேடும்
வட்டம் தகர்த்து

சுயதொழில் உளியில்
உன்னை செதுக்கு

உன்னுள் தங்கும்
குருவியின் கூட்டம்

*கதிரோன் வரும்வரை
காத்திருக்க நீ மலரல்ல‌

முடக்கிய கரங்களை விரி

பூமியை திருப்பி
விடியலை செய்!!!

*கண்களின் கரைகளை
உடைப்பதை விடுத்து
தலையை உயர்த்தி
உலகம் நோக்கு

கால்களை நகர்த்து
ஆயிரம் வழிகள்
உன் காலடி சேரும்

சமூகமே!
சற்றே விலகிடு
அவன் எழப்போகிறான்!!!

இன்று இறந்த இறந்தகாலம்

*கலவரத்தில் ஒடிக்கப்பட்டது
சிபியால் காக்கப்பட்டு
சிலையான‌
அந்த பறவையின் சிறகு...

*எரிக்கப்பட்டது
சிறகின் பெருமை சுமந்த‌
நூலகம் ஒன்று...

*நகரங்கள் மட்டுமல்ல‌
பழைய நல்ல நாட்களும்
இப்படித்தான் புதைகின்றன...

எவருக்கும் தெரியாமல்!!!

புதிய சந்ததிகள்
புணர முடியாமல்...
Related Posts with Thumbnails