காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Sunday, November 18, 2007

அனுப்புனர்... பெறுநர்...

*ஓ அந்த விடுப்புகள்
கல்விக்கால உடுப்புகள்
என் முதல் கற்பனைத்துளிகள்
ஆம்
என் பொய்கள் தாங்கிய‌
ஒரு பக்க பெட்டகங்கள்

*தந்தையின் கையெழுத்தை
எனக்கு கற்றுக் கொடுத்ததுவும்
அவரிடம் என்னை மாட்டி விட்டதுவும்
இந்த விடுப்புதான்!

*மருத்துவரை அனுகியதேயில்லை
பெருமையாய் கூறும் பாட்டியை
பலமுறை சாகடிக்க வைத்ததும்
இந்த விடுப்புதான்!

*திருமணம் விரும்பா
அண்ணணுக்கு கல்யாண தேதி
கண்டெடுத்ததுவும்...

உள்ளூர் தாண்டா எனக்கு
வெளியூர் விசா
வாங்கி தந்ததுவும்...

வலிக்காத வயிருக்காய்
மருத்துவரை அணுக வைத்ததுவும்...

என் நடிப்பு ஆசையை
மேடைகளில்லாமல்
நிறைவேற்ற உதவியதும்...

இந்த விடுப்புதான்!

*நண்பனுக்காய் ஒரு நாள்
நேர தாமதத்தால் ஒரு நாள்
நாசமாய்ப்போன படத்திற்காய் ஒரு நாள்
மகிழ்ச்சிக்காய் ஒரு நாள்
மகிழ்ச்சி தந்த அலுப்பிற்காய் ஒரு நாள்
விடுப்பெடுத்த நாளின் பாடம் எழுத ஒரு நாள்
சும்மா ஒரு நாள்

என இத்தனை நாளுக்கும்
ஈடு கொடுத்ததுவும்
இந்த விடுப்புதான்!

இந்த விடுப்பு
இயக்குநர் தாளாளர்
முதலியோருக்கு என்னை
அறிமுகம் செய்த விடுப்பு!

நண்பர் வட்டாரம்
அதிகப்படுத்திய விடுப்பு!

என் தேர்வு முடிவை
அன்றைக்கே அறிவிக்கும்
இந்த விடுப்பு!

நான் படித்ததில்
இன்னும் மறக்காதவை
"அ ஆ"
"ABCD"
அப்புறம் இந்த "விடுப்பு"

ஆனாலும்
இந்த விடுப்புதான்
என் நல்ல பெயர் மாற்றியதும்...

அல்லவை எல்லாம்
நல்லவை என்றதும்...
நல்லவை எல்லாம்
அல்லவை என்றதும்...

என் பாதையிலிருந்த
பூக்கள் பிடுங்கி
முட்கள் நட்டதுவும்...

கல்வியின் நாட்டத்தை
போதையென பொய் சொல்லி
புதைகுழியில் தள்ளியதும்...

"கண் கெட்ட பின்னே"
பழமொழியின் அர்த்தம்
அறிய வைத்ததுவும்...

சக மாணவர் பார்த்து
ஏங்க வைத்ததுவும்...

எல்லாம் விதியென‌
சொல்ல வைத்ததுவும்...

இந்த விடுப்புதான்...
இதே விடுப்புதான்...

இப்படிக்கு
தங்கள் கீழ்பணிந்த
ஒரு தண்டச்சோறு

Tuesday, November 13, 2007

வேலையில்லாத் திண்டாட்டம்

*நாங்கள் வேலை தேடுவதையே
வேலையாகக் கொண்டுள்ள‌
இருபத்தோராம் நூற்றாண்டின்
இணையற்ற இளைஞர்கள்

மக்கள் தொகையில்
பாதி எங்கள் தொகை
யார் இட்ட சாபமோ
வேலைக்கும் எங்களுக்கும்
ஏனோ ஓர் பகை
ஐ.நா தலையிட்டாலும்
தீராது இந்தப்பகை

*எங்க‌ள் வாழ்வு
வேலை தேடும் ப‌ட‌ல‌த்தை
பெரும் பகுதியாக‌க் கொண்ட‌
இன்னொரு இதிகாச‌ம்...

*இந்தியாவின்
எதிர்கால‌த்தூண்க‌ள்
க‌ட்டிட‌ம் இன்றி
காற்றைத் தாங்கிய‌ப‌டி...

*காளையின்
க‌ண்ணில் நிறைந்திருக்கும்
காதலியின் முகம் போல‌
எங்கள் கண்ணில்
"வேலை காலி இல்லை"...

*எங்கள்
தேடுதல் வேட்டையில்
மாய்வதென்னவோ
நாங்களேதான்...

*அடிமாடாய் ஆவதற்கும்
அருகதை அற்றவராய்
எங்கள் கண் வேலை தேட‌
வெய்யில் கண் பட்டுப்பட்டு
வெந்துபோன நாங்கள்தான்
மண் வாய்க்கு நேர்ந்து விட்ட‌
"தண்டச்சோறுகள்"!!!

*வேலைத்தேடும்
எங்களைத்தேடி
அமைப்பாய் செய்து
உறுப்பினர் அனைவரும்
ஒன்றாய்க்கூடி
அமைப்பிற்கொரு பெயர்
அழுதபடி வைத்தோம்
"தொலையாத
பொருளைத்தேடி
தொலைந்த கூட்டம்"
என்று...

* * * * * * * * * * *

இளைஞனே எழுந்திரு!
பட்ட அடிகள்
வலிக்கும் முன்னே
எழுந்திரு!

*அஸ்தமனித்த சூரியன்தான்
மீண்டும் உதயமாகிறது
*பகலில் கதிரால்
மறைக்கப்பட்டாலும்
இரவில் குளிர்தரும்
நிலவைப்போல‌
உன்னாலும் முடியும்‍‍ எழுந்திரு...

*விதையாய் ஒருநாள் இருப்பதுதான்
விருட்சமென ஒருநாள் புகழ்பெறும்
நம்பிக்கை விதையை உன்னுள்
விதைத்தால்
அது
விருட்சமென வளர்வது நிச்சயம்...

*தேவையற்றதை அகற்றினால்
பாறைகூட சிலையாகும்
உன்னையே சிற்பியாக்கி
நீயே சிலையாகு...

*உழைக்கத் தெரிந்தவனுக்கு
எதுவும் தொழில்

இளைங்கனே எழுந்திரு...

*கொடியை பிடித்தபிடி
விடாததால்
அந்த குமரனின்
பெயரும் நிலைத்தது

கொள்கையை பிடித்தபிடி
விடாததால் காந்தியை
மகாத்மா என உலகம் உதைத்தது

பாரதி இளைஞனின்
கவிதை வரிகள்
விடுதலை வேள்வியை
மூட்ட வில்லையா?

ஆம்ஸ்ட்ராங் இளைஞன்
விண்வெளி சென்று
நிலவில் கல்லை
காட்டவில்லையா?

*தூணே! உனக்கேன்
கட்டிடத் துணை
வேலை தேடும்
வட்டம் தகர்த்து

சுயதொழில் உளியில்
உன்னை செதுக்கு

உன்னுள் தங்கும்
குருவியின் கூட்டம்

*கதிரோன் வரும்வரை
காத்திருக்க நீ மலரல்ல‌

முடக்கிய கரங்களை விரி

பூமியை திருப்பி
விடியலை செய்!!!

*கண்களின் கரைகளை
உடைப்பதை விடுத்து
தலையை உயர்த்தி
உலகம் நோக்கு

கால்களை நகர்த்து
ஆயிரம் வழிகள்
உன் காலடி சேரும்

சமூகமே!
சற்றே விலகிடு
அவன் எழப்போகிறான்!!!

இன்று இறந்த இறந்தகாலம்

*கலவரத்தில் ஒடிக்கப்பட்டது
சிபியால் காக்கப்பட்டு
சிலையான‌
அந்த பறவையின் சிறகு...

*எரிக்கப்பட்டது
சிறகின் பெருமை சுமந்த‌
நூலகம் ஒன்று...

*நகரங்கள் மட்டுமல்ல‌
பழைய நல்ல நாட்களும்
இப்படித்தான் புதைகின்றன...

எவருக்கும் தெரியாமல்!!!

புதிய சந்ததிகள்
புணர முடியாமல்...

Wednesday, October 31, 2007

60 வயதில் அனாதைக் குழந்தை

*ஏலேய் என் ராசா
நான் பெத்த மகராசா

உங்காத்தா உன்னத்தான்
பத்து மாசம் சொமந்திருக்கா
உங்கப்பன் நான் மட்டும்
பலவருஷம் சொமந்தேனே...

அப்பத்தான் கண்ணசர்வேன்
தொட்டிலிலே நீ அழுவ‌
ஓடி நான் வருவேன்
ஓன் அழுக நிறுத்திவப்பேன்...

இப்படியே பல இரவு
நித்திரய தொலச்சிருக்கேன்
அதுக்காக அழுததில்லை
நீ அழ நான் பொறுத்ததில்ல...

*தூக்கி நான் கொஞ்சயிலே
நெஞ்சுமேல நீ மிதிப்ப‌
பின்னாளில் மிதிப்பேன்னு
அடிக்கோடு போட்டுருக்க‌
அப்ப எனக்கு புரியலயே...

*பள்ளியிலே படிக்கனுன்னு
எங்கப்பன் சொத்த வித்தேன்
கல்லூரி நீ முடிக்க‌
என் சொத்த சேத்து வித்தேன்

முதுகெலும்பு ஒவ்வொன்னா
உதுத்து விழுந்தாழும்...

என் இடுப்ப எந்தலையே
தொடுமளவு வளஞ்சாழும்...

நீ நிமிர‌த்தானேன்னு
ச‌லிக்காம நான் வ‌ள‌ஞ்சேன்

த‌ல‌ இப்போ காலுகிட்ட‌
நீ இப்போ என‌க்கு எட்ட‌...

*எம்புள்ள‌ ந‌ல்ல‌ புள்ள‌
மேல்ப‌டிப்பு முடிச்ச‌புள்ள‌
ஒச‌ந்த‌வேல‌ குடுதாயி
சாமிகிட்ட‌ வேண்டிக்கிட்டேன்
பூ மேல‌ நீ ந‌ட‌க்க
பூமிதிய‌ல் நான் செஞ்சேன்...

*ஆத்தா க‌ண்தொற‌ந்து
ந‌ல்ல‌ வேல‌ கெட‌ச்சிருச்சி
மொத‌ மாச‌ ச‌ம்ப‌ள‌த்த‌
முந்திகிட்டு த‌ருவேன்னு
மொக‌ந்நோக‌ காத்திருந்தேன்...

ம‌ரும‌க‌ என் ம‌க‌ராசி
உன்கூட‌ வ‌ந்து நின்னா
அவ‌ளுக்கு செல‌வுன்னு
க‌ண‌க்கு நீ காட்டிபுட்ட‌...
முத‌லுங் க‌டைசியுமா
அப்ப‌த்தான் கால‌த்தொட்ட‌...

செத்துப்போன‌ என் மொக‌த்த‌
அட‌க்க‌ஞ்செஞ்சு சிரிச்சி வ‌ச்சேன்
க‌ல்யாண‌ம் ப‌ண்ணி வ‌ச்சேன்...

*குடிவாழ‌ வ‌ந்த‌ம‌க‌
குடிகெடுக்க‌ போறான்னு
தெரியாம‌ செஞ்சுபுட்டேன்
த‌ல‌காணி ம‌ந்திர‌த்த‌ ஓதி
அவ‌ செஞ்ச‌ யாக‌த்துக்கு
என்ன‌ ப‌லி கொடுத்துபுட்டா...

*இல்ல‌மிது இல்ல‌மின்னு
முதியோர் இல்ல‌ம் சேத்துபுட்ட‌
ஓவென்று நான் அழுதா
ஊர் உன்ன‌ தூத்துமின்னு
ஒதுக்குபுற‌ம் அழுதுவ‌ச்சேன்...

இல்ல‌த்து ஐயாவே!
ஒன‌க்கு ஒரு விண்ண‌ப்ப‌ம்
நான் செத்த‌ பின்னாலே
க‌ண்ண‌ ம‌ட்டும் மூடிடாத‌
கொள்ளி வ‌க்க‌ வந்த‌புள்ள‌
மொக‌த்த‌ நான் பாக்க‌ வேணும்...

நன்நெருப்பு

*மனிதராய் அன்றி
நெருப்பாய் வாழ்வது
உயர்வென்பேன் கண்டீர்!!!

நெருப்பு நெருப்பை கொல்வதில்லை
நெருப்பு நெருப்பை வெருப்பதில்லை

*தன் பலம் அன்றி
ஆயுதம் எதையும்
அது ஏற்பதில்லை...

*உணவுள்ளவரை உயிர் வளர்க்கும்
இல்லாவிடில் சவம் வளர்க்கும்

பிச்சைப்புகினும்...

நெருப்புக்கு பிடிக்காது

*எதிரியாய் இருந்தபோதும்
தண்ணீரை தாமாய்
அழிப்பது இல்லை

*சாகிறபோது
சாகிறோம் என்று
நெருப்பு அழுததாய் சான்றுகளில்லை...

Tuesday, October 30, 2007

கவிஞனாக வேண்டுமா?

*உன் பார்வையின் நீளம் விரி!

*அறிமுக‌ம‌ற்ற‌வ‌னின் இற‌ப்புக்கும்
அழுக‌ க‌ற்றுக்கொள்!

*துன்பமோ... இன்ப‌மோ...
சுவ‌ர்க்கமோ... ந‌ர‌க‌மோ...
இன்னதோ... இன்னாதோ...
புல‌ன்க‌ள் இல்லாவிட்டாலும்
எல்லாம் அனுப‌வி!

*நூலைத் திரிக்கும் போது
நீ அறுந்து போ!

*ம‌ல‌ர்கூட்ட‌ம் இருந்தாலும்
நீ ம‌ண‌க்க‌ முய‌ற்சி செய்!

*மூத்த க‌விக‌ளை துரோண‌ராய் ஏற்று
நீயும் துரோண‌ராய் இரு!

*குளிர் அறைக்குள்
விய‌ர்க்க க‌ற்றுக்கொள்!

*ச‌ராச‌ரிக்கும் குறைவாக‌வே
இமைக்கப் ப‌ழ‌கு!

*ப‌னியை உடைக்கும்
க‌லையை க‌ல்!
சூரிய‌னை அடைகாக்கும்
அற்புத‌ம் அறி!
அதீத‌த்தில் எளிமை சேர்!
எளிமையில் அதீத‌ம் சேர்!

*இய‌ற்கையோடு பேசும்
ப‌ரிபாடை க‌ற்றுக் கொள்!

*வெள்ளை நிற‌மா நீ
சீக்கிர‌ம் க‌ருப்பாகு
பெரும்பாலான ந‌ற்க‌விக‌ள்
க‌ருப்பு நிறம்தானாம்...

*இர‌வின் நூல்பிரித்து
விடிய‌ல் செய்!
விடிய‌லின் கண்பிடுங்கி
இர‌வு செய்!

*நித்த‌ம் க‌ற்ப‌மாகும்
பூமிக்கு பிர‌ச‌வ‌ம் பார்!

*உன் ப‌டைப்புக‌ளின்
முத‌ல் ர‌சிக‌ன்
முத‌ல் விம‌ர்ச‌க‌ன் நீயாயிரு!

*நினைவுகொள்
க‌ம்ப‌னின் முத‌ல் ப‌டைப்பே
இராமாய‌ண‌ம் இல்லை!!!

*உன் கைகளுக்குள் வான‌ம் அட‌க்கு
ஒரு ப‌னித்துளிக்குள் நீயும் அட‌ங்கு!

*உன் பேனாவின் பிர‌ச‌வ‌ வ‌லியை
ப‌டிப்ப‌வர் உண‌ர‌ எழுது!

*ஞான‌ம் வேண்டுமா பாதிரியாகு
காம‌ம் வேண்டுமா பாவியாகு
விடுத‌லை சொல்லில் பார‌தியாகு
உன் பேனாவின் அரிதார‌ம்
அடிக்க‌டி மாற்று!!!

தாயாய்... சேயாய்...
ம‌லையாய்... ம‌டுவாய்...
உன‌க்கு நீயே ந‌ண்ப‌னாய்...
உன‌க்கு நீயே எதிரியாய்...

எல்லாமாய் இரு
ஆனால் "நான் க‌விஞன்" என்ற‌
நினைப்பு ம‌ட்டும்
ஒருபோதும் கொள்ளாதே!!!

Monday, October 22, 2007

உன்னிடம் பிடித்தது

*கொலுசு பதித்த‌
கெண்டைக்கால் தழும்பு

*பாலைவன மண்போலே
சரிந்து விழும் கூந்தலை
ஒதுக்கும் உன் சுட்டுவிரல்

*செவ்விதழின் சிறுவரிகள்

*சிரிக்கையிலே முகத்தில்
யாரும் வரையாமலே
வந்துவிழும் கோட்டோவியங்கள்

*நீ வியக்கும் போதெல்லாம்
வியக்க வைக்கும்
விரிந்த உன் கண்கள்

*வெளியில் தெரியாத‌
கழுத்து சங்கிலி

*உன்னை ரசிக்க உதவிய‌
உன் வனாந்திர மௌனங்கள்

*நீ எப்போதும் அடைகாக்கும்
உள்ளங்கை கைகுட்டை

*கரியநிறம் கொண்ட போதும்
இர‌ண்டும் என்ன‌ வான‌வில்லா
கேட்க‌ சொல்லும் புருவ‌ங்க‌ள்

*வான‌விற்க‌ளின் ந‌டுவே
ஒற்றை நிலா‍‍‍‍‍‍‍‍‍‍‍
அழ‌கிய‌ பொட்டு

*பேச்சினூடே இத‌ழ்வ‌ழுக்கி
சில‌சொற்க‌ள் இட‌றிவிழ‌
தாவிப்பிடிக்க‌
இத‌ழ்க‌டிக்கும் வெண்ப‌ற்க‌ள்

*வ‌ருவ‌தே தெரிய‌ம‌ல்
க‌ண‌ நேர‌ மின்ன‌ல் போல்
வ‌ந்துபோகும் உன் வெட்க‌ம்

*அலைக‌ள் போல் அடிக்க‌டி வ‌ந்தும்
க‌டிக்க‌ப்ப‌டாத‌ க‌ட்டைவிர‌ல் ந‌க‌ம்

*பிரிகிற‌ போதெல்லாம்
என் தோள் தொட்டு அழைக்கும்
உன் 2ம் 3ம் பார்வைக‌ள்

*பார்க்கும் கேட்கும் போதுக‌ளிலெல்லாம்
ப‌ர‌வ‌ச‌ம் த‌ரும்
உன்னை சுட்டாத‌ உன் பெய‌ர்

*உனை பாடு பொருளாய் கொண்ட‌த‌னால்
முத‌ல் ர‌சிக‌னாக்கும்
என் க‌விதை

*பெரும்ழை போல் அல்லாம‌ல்
சிறு இலைவிளிம்பில் சொட்டுசொட்டாய்
வ‌ழிந்துவிழும் உன் காத‌ல்
பிடிக்கும் உன்னிட‌ம்.......
Related Posts with Thumbnails