காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Tuesday, October 30, 2007

கவிஞனாக வேண்டுமா?

*உன் பார்வையின் நீளம் விரி!

*அறிமுக‌ம‌ற்ற‌வ‌னின் இற‌ப்புக்கும்
அழுக‌ க‌ற்றுக்கொள்!

*துன்பமோ... இன்ப‌மோ...
சுவ‌ர்க்கமோ... ந‌ர‌க‌மோ...
இன்னதோ... இன்னாதோ...
புல‌ன்க‌ள் இல்லாவிட்டாலும்
எல்லாம் அனுப‌வி!

*நூலைத் திரிக்கும் போது
நீ அறுந்து போ!

*ம‌ல‌ர்கூட்ட‌ம் இருந்தாலும்
நீ ம‌ண‌க்க‌ முய‌ற்சி செய்!

*மூத்த க‌விக‌ளை துரோண‌ராய் ஏற்று
நீயும் துரோண‌ராய் இரு!

*குளிர் அறைக்குள்
விய‌ர்க்க க‌ற்றுக்கொள்!

*ச‌ராச‌ரிக்கும் குறைவாக‌வே
இமைக்கப் ப‌ழ‌கு!

*ப‌னியை உடைக்கும்
க‌லையை க‌ல்!
சூரிய‌னை அடைகாக்கும்
அற்புத‌ம் அறி!
அதீத‌த்தில் எளிமை சேர்!
எளிமையில் அதீத‌ம் சேர்!

*இய‌ற்கையோடு பேசும்
ப‌ரிபாடை க‌ற்றுக் கொள்!

*வெள்ளை நிற‌மா நீ
சீக்கிர‌ம் க‌ருப்பாகு
பெரும்பாலான ந‌ற்க‌விக‌ள்
க‌ருப்பு நிறம்தானாம்...

*இர‌வின் நூல்பிரித்து
விடிய‌ல் செய்!
விடிய‌லின் கண்பிடுங்கி
இர‌வு செய்!

*நித்த‌ம் க‌ற்ப‌மாகும்
பூமிக்கு பிர‌ச‌வ‌ம் பார்!

*உன் ப‌டைப்புக‌ளின்
முத‌ல் ர‌சிக‌ன்
முத‌ல் விம‌ர்ச‌க‌ன் நீயாயிரு!

*நினைவுகொள்
க‌ம்ப‌னின் முத‌ல் ப‌டைப்பே
இராமாய‌ண‌ம் இல்லை!!!

*உன் கைகளுக்குள் வான‌ம் அட‌க்கு
ஒரு ப‌னித்துளிக்குள் நீயும் அட‌ங்கு!

*உன் பேனாவின் பிர‌ச‌வ‌ வ‌லியை
ப‌டிப்ப‌வர் உண‌ர‌ எழுது!

*ஞான‌ம் வேண்டுமா பாதிரியாகு
காம‌ம் வேண்டுமா பாவியாகு
விடுத‌லை சொல்லில் பார‌தியாகு
உன் பேனாவின் அரிதார‌ம்
அடிக்க‌டி மாற்று!!!

தாயாய்... சேயாய்...
ம‌லையாய்... ம‌டுவாய்...
உன‌க்கு நீயே ந‌ண்ப‌னாய்...
உன‌க்கு நீயே எதிரியாய்...

எல்லாமாய் இரு
ஆனால் "நான் க‌விஞன்" என்ற‌
நினைப்பு ம‌ட்டும்
ஒருபோதும் கொள்ளாதே!!!

Monday, October 22, 2007

உன்னிடம் பிடித்தது

*கொலுசு பதித்த‌
கெண்டைக்கால் தழும்பு

*பாலைவன மண்போலே
சரிந்து விழும் கூந்தலை
ஒதுக்கும் உன் சுட்டுவிரல்

*செவ்விதழின் சிறுவரிகள்

*சிரிக்கையிலே முகத்தில்
யாரும் வரையாமலே
வந்துவிழும் கோட்டோவியங்கள்

*நீ வியக்கும் போதெல்லாம்
வியக்க வைக்கும்
விரிந்த உன் கண்கள்

*வெளியில் தெரியாத‌
கழுத்து சங்கிலி

*உன்னை ரசிக்க உதவிய‌
உன் வனாந்திர மௌனங்கள்

*நீ எப்போதும் அடைகாக்கும்
உள்ளங்கை கைகுட்டை

*கரியநிறம் கொண்ட போதும்
இர‌ண்டும் என்ன‌ வான‌வில்லா
கேட்க‌ சொல்லும் புருவ‌ங்க‌ள்

*வான‌விற்க‌ளின் ந‌டுவே
ஒற்றை நிலா‍‍‍‍‍‍‍‍‍‍‍
அழ‌கிய‌ பொட்டு

*பேச்சினூடே இத‌ழ்வ‌ழுக்கி
சில‌சொற்க‌ள் இட‌றிவிழ‌
தாவிப்பிடிக்க‌
இத‌ழ்க‌டிக்கும் வெண்ப‌ற்க‌ள்

*வ‌ருவ‌தே தெரிய‌ம‌ல்
க‌ண‌ நேர‌ மின்ன‌ல் போல்
வ‌ந்துபோகும் உன் வெட்க‌ம்

*அலைக‌ள் போல் அடிக்க‌டி வ‌ந்தும்
க‌டிக்க‌ப்ப‌டாத‌ க‌ட்டைவிர‌ல் ந‌க‌ம்

*பிரிகிற‌ போதெல்லாம்
என் தோள் தொட்டு அழைக்கும்
உன் 2ம் 3ம் பார்வைக‌ள்

*பார்க்கும் கேட்கும் போதுக‌ளிலெல்லாம்
ப‌ர‌வ‌ச‌ம் த‌ரும்
உன்னை சுட்டாத‌ உன் பெய‌ர்

*உனை பாடு பொருளாய் கொண்ட‌த‌னால்
முத‌ல் ர‌சிக‌னாக்கும்
என் க‌விதை

*பெரும்ழை போல் அல்லாம‌ல்
சிறு இலைவிளிம்பில் சொட்டுசொட்டாய்
வ‌ழிந்துவிழும் உன் காத‌ல்
பிடிக்கும் உன்னிட‌ம்.......

பயணசீட்டெதற்கு?

*நீண்ட ரயிலின்
ஒவ்வொரு சக்கரமும்
தடதடக்கிறது உன் பெயரை

*விட்டுவிலகும் மரங்களில்
நிலைக்கிறது உன் பிம்பம்

*உதடு நழுவும் வார்தைகளை
உள்ளிழுத்து போகிறது
சன்னலோர காற்று

*உருமாறும் வானம்
உருவகித்து போகிறது
உன் முகம் காட்டும் பாவங்களை

*திடீர் மழையில் வந்து தீண்டும் சாரல்கள்
தந்து போகும்
சின்ன உன் சீண்டல்களை

*உன் அருகாமையின்
நாழிகைக‌ள் ந‌க‌ர‌ மறுக்கும்
ப‌னி இர‌வில்

*ப‌ண‌ம் கொண்ட‌ தோல் பையில்
க‌ண‌க்கும் உன் புகைப்ப‌ட‌ம்

*க‌த‌றும் ர‌யில் ச‌த்த‌ம்
பிர‌திப‌லிப்ப‌தில்லை
முழுமையாய் என் ம‌ன‌தை

*உன் தொலைவை சொல்லிக்காட்டும்
தூர‌த்தில் வெள்ளை நிலா

*ச‌ல‌ன‌ங்க‌ள் த‌ருவ‌தில்லை
த‌ண்ட‌வாள‌ம் போல் நீயும்
*த‌ட‌ங்க‌ள் ப‌திப்ப‌தில்லை
ர‌யிலைப்போல் நானும்

*கண் தெரியா தூர‌த்தில்
ம‌றைந்து கிட‌க்கிற‌து ம‌ர்மம்

*ப‌ய‌ண‌சீட்டு ஏதுமின்றி
ப‌ய‌ணிக்கிற‌து என்னோடு
என் காத‌ல்!!!
Related Posts with Thumbnails