காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Friday, August 20, 2010

சின்ன ஒலி



*கண்ணே நின் நாவிருந்தும்
நழுவுகிற சொல் எல்லாம்
தமிழ்கொல்லன் வார்த்திட்ட‌
பொன் என்றே பூண்டு கொல்வேன்

*பண்ணென்ன பாட்டென்ன‌
உயிர் இழுக்கும் இசையென்ன
நின்கண் மீட்டுமொரு இராகமதை
யாரரிவார் நானறிவேன்

*உலகின் ஒளி காட்டும்
கண்ணுமணி நிறமென்ன?

கண்ணனவன் நிறமென்ன?

சின்ன ஒளி பதுங்கியிருக்கும்
கும்மிருட்டின் நிறமென்ன?

கேட்போர்க்கு நின் கூந்தல் நிறமென்பேன்
வேறு பெயர் நானறியேன்

*அடுக்கி வைத்த மின்னல் கூட்டம்
அழகான பல்வரிசை
மலர் கூம்பல் கொல்லும்
அதிசய நிமிடம்
இதழ்விரிந்த உன் சிரிப்பு

*சத்தங்களை நான் எழுப்பி
வீணை உன் நரம்பிழுப்பேன்
உன் சின்ன மூக்கால் மெல்லச்சிணுங்கி
சிறுகச் சிறுக செதுக்கு என்னை

*உன் பொன்முகம் ஒப்ப‌
உவமை சொல்ல‌
நிலவுக்கு ஏது முகம்
தெளிந்த தடாகம் எட்டிப்பார்க்க‌
உவமை கிடைக்கும்
தமிழும் பிழைக்கும்

*இதமாக உன் கையில்
சிந்தாமல் எனை ஏந்தி
புல்மெத்தை மடி தன்னில்
பனிபோல எனைத்தாங்கு
எனை மறந்த உறக்கத்தில்
உன் பொன் நினைவு உலாபோகும்
கனவேதும் கலையாமல்‍ - கலைந்த‌
என் கேசம் கோதி
மழழை என்னை கததப்பாக்கு
தாயே உறங்க வேண்டும்
இப்படியே
உன்னோடு உன் மடியில்!!!

Wednesday, August 18, 2010

"அவை" அல்ல "அது"



உரு கொண்ட ஓர் நிழலாய்
அருகினிலே என் மனைவி
கவிதையின் கருவாய்
என் வாழ்வில் அவள்

நரை வந்து வீழ்ந்தாலும்
இவள் தளிர்குறையா
பருவமலர்
தேய்மானம் கொண்டதனால்
தங்கமென்ன கல்லின் இனமா

கண் ரெண்டும் கலந்த பின்னே
பிரிவைத்துற்ந்து
இல்லறம் திறந்தோம்

சோகமென்று வந்துவிட்டால்
என் கண்ணீர் நதி
கலப்பது அவள் கடலில்
அவள் நதியோ என் கடலில்
ஒற்றை மகிழ்ச்சி
இருமனம் சேர்ந்து
இரு மடங்காய்

நீதான் என் முதல் மனைவி
நீதான் என் இரண்டாம் மனைவி
முதலுக்கும் இரண்டுக்கும்
இடைவெளி ஒரு பிறவி

60 வயது மனதை அறுத்தது
நம் வீட்டு கடிகாரத்தில்
எமன் வரும் நேரம் எப்போதும் தெரிந்தது

முதல் பார்வை முதல் பேச்சு
முதல் முத்தம் முதல் உறவு
இன்னும் பல "முதல்" களை
கோர்த்த முத்தாய் காத்த உள்ளத்து ஓரம்
முதல் "கடைசியாய்"
ஒட்டிக்கொண்டது
மரணபயம்

கஷ்டமேதும் தந்திராத
என் இஷ்டமான அபிமானி
பெண்மைக்கே முதன்மை என்று
உரிமை  நீ  கோராதே
தனிமையின் அறிமுகம்
நீ எனக்கு செய்யாதே
மாறாக நடந்திடுமோ
ஐயகோ வேண்டமடி
உன் அழுகை கேட்க‌
எரியும் என் சிதையும்
எழுந்து வரும்...

கட்டி அணைத்தபடி
"முதல்"களை மீண்டும்
தூசு தட்டுவோம்
ஒட்டுச்செடி போல‌
ஈருடல் மறந்து
ஓருடலாய் இருப்போம்
வரும் மரணம்
நமை
"அவை" எனக்காணாது
"அது" என காணட்டும்...

பிறப்புக்கு ஒப்பாரி


*ஏலேய்! முத்தையா
நீ கட்டிவந்த பொட்டக்கழுத‌
பொட்டப்புள்ள ஈந்திருக்கா...

ஆண் வாரிசு வர்க்கமுன்னு
ஊரு உலகம் நம்மத்தான்
வாயர புகழ்ந்திருக்கு
கண்ணு கோடி வச்சிருக்கு!

*திருஷ்டி வச்சது போல்
பொட்டபுள்ள ஈந்து புட்டா
வலக்கால வக்கிமுன்னே
இடக்கால வச்ச மக!

*அவ வாந்தி எடுத்தப்போ
பேரப்புள்ள வந்ததேன்னு
நான் மயங்கி விழுந்தேனே...

புள்ள நல்லா வளரணுமின்னு
தெனந்தெனந்தான்
நெல்லுச்சோறு ஆக்கிவச்சேன்!!!
நெஞ்சுமேல அவன் மிதிக்க‌
ஒடம்ப கொஞ்சம் தேத்தி வச்சேன்!!!

சாரலோட வந்த மழை
இடியோட விட்டுடிச்சே...

விருட்ச‌முன்னு நெனச்சேனே
விசமாகப்போயிருச்சே...

செலவ இவ பெத்துப்போட‌
செலவு நான் செய்வேனா

*ஒங்கப்பன் சொத்துன்னு
ஒடிஞ்சுபோன நான் இருக்கேன்
ஒடியப்போர நீ இருக்க

ஒரு டம்ளர் பால் கொடுக்கும்
காளக்குட்டி ஈந்த சனியன்
கரவமாடு ஒன்னிருக்கு

*விறகு இல்லேன்னு
கதவா ஆன மரத்த
ரெண்டாம் முறையா வெட்டிவெட்டி
விறகெடுத்து அடுப்பெரிச்சேன்

கன்னம் வைக்கும் கஷ்டம் இல்லேன்னு
கள்ளனே வந்தாலும்
மவராசன் இட்டு வந்ததிலே
இங்க கொஞ்சம் விட்டு போனாதான் உண்டு

எத‌ வித்து
உம்மகள நீ தொலப்ப‌

*வேண்டாம்டா வெறும்பயலே
தாய்ப்பாலு சொரக்குமுன்னே
கள்ளிப்பாலு ஊத்திருடா
பொழச்சாலும் பொழச்சுக்குவா
நெல்லு ரெண்டு கொழச்சு வாடா

குருத்து கொன்ன பாவத்தீய‌
பொதச்ச இடத்தோரம்
குருத்து ஒன்னு நட்டு வச்சு
தண்ணி ஊத்தி தணிச்சுக்கலாம்...


* * * * * *

சொன்னதெல்லாம் வார்த்தயில்ல‌
உசிரறுக்கும் வாளுன்னு
மயங்கி தெளிஞ்சு
தெளிஞ்சு மயங்கி
ஒரு தாய்மை தீப்பிடித்தது

* * * * * *

*ஏண்டி மவளே இங்க வந்த‌
 என்னோட வயித்துக்குள்ள‌
 உன்ன குடி வச்சானே
 குடிகார உங்கப்பன்
 குடிகெடுக்க வந்தவன்னு‍ ஒன்ன‌
 கொன்னு  கொல்லயில் போட‌
 அடி எடுத்து வச்சிபுட்டான்
 ஆத்தா சொல்லுக்கு
 புடி கொடுத்து உட்டுபுட்டான்

ஏண்டி மவளே இங்க வந்த‌

*பத்து மாசங்கூட‌
 மழுசாக வாழாம‌
 மூணுமாசம் முன்னாடி
 முந்திக்கிட்டு வந்ததெல்லாம்
 முணுமுணுக்க முயலும்போதே
 முடங்கி நீ போறதுக்கா

*ஆத்தா மொகம்பாக்க
 அவசரமா வந்தவளே
 ஆத்தா வலி புரிஞ்சி
 அழுதுகிட்டே பொறந்தவளே
 சீரழியும் கத கேட்டும்
 சிரிச்சுகிட்டே இருப்பவளே

ஏண்டியம்மா இங்க வந்த‌

*கள்ளிக்குருத்தோரம் லேசாக கருத்திருக்காம்
 உரமாக ஓன் உசுரு
 ஒப்படைக்க போராக‌
 மறுபடியும் சொமந்தாலும்
 மகராசி ஒனப்போல‌
 மக எப்ப நான் சொமப்பேன்

கம்போட நிக்கும்போது
பாம்பு சீறி என்ன பண்ண‌


அழுது வக்கிறேண்டி
ஒனக்காக சொரந்த பால‌
கண்ணீரா கக்கறேண்டி


அறுந்த தொப்புள் கொடி
ஓன் நினைவா வக்கிறேண்டி...

Wednesday, June 30, 2010

கண்கள் பேசும் கணங்கள்


* மூச்சுக்காற்றில் ஆடை விலகும்

* தொட்டால்சிணுங்கி ஆகும் உடல்
சினுங்கினும்...
விடாது விரல்கள் வேகம் கூட்டும்
உடலே பெய்து உடலே நனையும்
வியர்வை மழையில்
தகிக்கும் உடல்கள் தாகம் தீர்க்கும் ...

வியர்க்கா இதழை இதழ்கள் நனைக்கும்
சுவைகள் புதிதாய் நாவில் இனிக்கும்

* தடாகம் தொலைத்த
தரைமீன் போலே
இயல்பை மறந்து
இதயம் துடிக்க
நகக்கண் எல்லாம் கவிதை படிக்கும்

* உடலோடு மோதி இதழ்கள்
முத்த தாளம் போடும்
சிணுங்கி மெல்ல முனகி குரல்கள்
ஒத்திசைந்து பாடும்

வழியா? இன்பமா?
புரியாது போகும்

உள்ளங்கைக்குள் முடிந்து வைக்க - முனைந்து
முடிவில் முடியாது போகும்

* வழி மறந்த இதழ்கள் வந்து
காமன் கதைகள் கழுத்தில் சொல்லும்
கேட்காது ஆயினும்
கழுத்தும் கேட்கும்

* முடி இழுத்து வலி கொடுக்கும்
வழி கொடுத்து இடை துடிக்கும்
போதும் என்றே உடல் மடை உடைக்கும்
இறகென பறந்த உடல்
தரை இறங்கும்

* சேறு அடங்கிய நீராய்
அகம் தெளியும் - பிறகுதான்
தெளிவாய் அவரவர் முகம் தெரியும்
முன்னை தெரிந்த அழகில்
சின்ன குறை தெரியும் - ஆயினும் என்ன
அரைமணி போதும் குறை மறையும்
களங்கம் இல்லா பிறை தெரியும்!!!

Tuesday, June 22, 2010

நாளை ஒன்று நாளும் உண்டு


*குருவிகள் கட்டிய கூடு
குருவிக்கு சொந்தம் இல்லை
நாங்கள் கட்டிய கூடு
எங்கள் சொந்தம் இல்லையா
நாங்கள் என்ன குருவிகளா?

*கூடுவிட்டு கூடு கட்டி
கூடி வாழ குருவிகளால் ஆகும்
தாய் வீடு விட்டு நாடு நகர்ந்து
அலைச்சத்தமும் அழுகைசத்தமும்
மறந்து வாழ அகதிகளால் ஆகுமா?

*பதுங்கு குழியின் இரண்டு நாள் இருட்டில்
கவனம் கலையாத அன்னையின் சீலைப்போர்வை
தந்த பாதுகாப்பை...

ஒளிபுக முடியா நெருக்கத்தில்
சகோதரனின் வேர்வை தந்த குளிரை...

சிறுநீர் கழிக்க உயிரை பணயம் வைத்த
தகப்பனின் வருகைகேங்கும் மனதை...

காலை கட்டிலாக்கி
கால் மயிரை மெத்தையாக்கி
மேல் சட்டையை காற்றாடியாக்கி
மாமன் தந்த உறக்கத்தை ....

சிறு துளை கீற்று வெளிச்சத்தில்
எனக்கான பார்வைகள் தேக்கி
காத்திருந்த அவள் கண்களை...

மீட்டுத்தருமா போர்!!!

*நித்தம் நிகழும்
உயிர்பலிகளின் இலக்கங்களில்
பொய்கள் சொல்லி இலக்குகளை எட்டுவதாய்
எங்களை புறந்தள்ளி
போர்முனை மட்டும் போனது எங்கே???

*பதுங்கு குழி வாழ்வை மாற்ற
பலியாவதும் புலியாவதும்தான்
நாங்கள் உற்ற ஒற்றை வழி
பழி சொல்லும் நாடுகளுக்கு எங்கள்
வலி உணரும் புலன்கள் இல்லை...

*பங்கர் குண்டு, வெண்பாஸ்பரஸ் மழை,
கண்ணிவெடி, கொதுக்குண்டு, க்ளஸ்டர்
வெள்ளைவேனில் தொலைந்து போன ஆண்கள்
கொல்லைபுறத்தில் கற்பிழந்த பெண்கள்
இதை நித்தம் நீங்கள்
படித்து மறந்து போகிறீர்
இதில் நித்தம் நாங்கள்
இதயம் துடிக்க மறந்து வாழ்கிறோம்!!!

*குணம் பிளன்ர கொதபாய் - ஓர்
இனம் அளிக்க உரை கொண்டால்
சினை கொள்வோம் மீண்டும் மீண்டும்
சினம் கொள்வோம் யாண்டும் யாண்டும்
சிறை கொள்வோம்
இலங்கை சுற்றம் கரை கொள்வோம்

*பதைபதைத்து இறந்த உடல்
பதியுங்கள் குழி பறித்து
விதைபோல விழித்தெழுவோம்
பறைசாடி கதைத்திடுவோம்

இருள்வதால் முடியாது
இரவியின் கதை என்று...

Saturday, June 5, 2010

எழுதாத கவிதை



*காதல் தந்தது நீதான்
நான் பெற்றதுதான்
தெரியாதுனக்கு...

*களவு கற்றவள் போலே
இதயக்கன்னம் இட்டது நீதான்
உளவு கண்டு உரைத்திட்டேன்
எனக்குள் மட்டும்.

*உலை தொட்ட மெழுகாக
நிலை குழைந்தவன் நான்தான்
பிழை இங்கு என்னவெனில்
சிலையான நீதான்
உளையானாய் என நீ
அறியாமல் போனாய் !!!

*என்னை களவாடி சென்றவள் நீதான்
என் கடவுச்சொல் ஆனாய்!!!

*அழகான நதி போலே
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
கரையாக உன்னை நான்
தொடர்வதை அறியாமல் ...

*காதல் சொல்லாத என் நிலையை
சொல்லி நீ நகைக்கலாம்
படித்து நீ கிழிப்பதற்கு
எழுதப்படாமலேயே இருக்கட்டும்
என்
காதல் கவிதை...

Friday, June 20, 2008

பண்பாடு

* பண்படுதலுக்கான நெறிமுறைகள்
நாகரீக வளர்ச்சியின் அடிப்படைகள்
வாழ்வியலின் விதிமுறைகள்
தேசத்தின் கடமைகள்
அனைத்திற்கும் ஓர் பெயர்தான் பண்பாடு

*காதல், திருமணம்
இல்லறம், குடும்பம்
கல்வி, தொழில்
கலை, இலக்கியம்
இன்னும் எல்லாம்
பண்பாட்டின் அங்கங்கள்

*வீதியில் பார்த்தால் அரிவாள் வெட்டு
வீடு தேடி வந்தால் வெட்ட ஒரு விருந்து இது
பகைவனுக்குமான நம் பண்பாடு

*பாரதியே ஆனாலும்
தாலியின்றி மனைவியில்லை
இல்லறத்தின் பண்பாடு

*சுவற்றில் அல்லாது
சுவர்களுக்குள் வரைதல்
காதலின் பண்பாடு

*உழுமண் உழுது
உழுவேர் கட்டி
வியர்வையிலே நே பாய்ச்சி
ஊர் உண்ண உழைத்து வாழ்தல்
இயற்கையினை வாழ்த்தி வாழ்தல்
உழவர்தம் பண்பாடு

*கொற்றவனே ஆனாலும்
சட்டம் பொது என்பதுதான்
நீதியின் பண்பாடு

*தன்னலத்தை போற்றி நின்றால்
தனித்தெய்வம் நன்று
மனதில் எண்ணி வணங்கி நின்றால்
இறைவன் அவன் ஒன்று
இறையாண்மையின் பண்பாடு

*நோயுற்ற மிருகம்
கொல்வதில்லை வேட்டையின் பண்பாடு
மக்கள் நலன்
காப்பதிங்கே கோட்டையின் பண்பாடு

*கற்கும் கல்வி
தெளிந்தறிதல் மாணவர் பண்பாடு
தெளியும் படி
தெரிவித்தல் ஆசிரியர் பண்பாடு

*நிகழ்காலம் பத்வித்தல்
வரும்காலம் புதுப்பித்தல்
நற்கலையின் பண்பாடு

*தன்னொழுக்கம் தன்மானம்
தன் கடமை தன் பெருமை
சிதையாத வாழ்வே
சிறப்பான் வாழ்க்கை என‌
பிறர் போற்ற வாழ்தல்
மானுடப்பண்பாடு

*இடும் தொட்டிலில் தொடங்கி
இடுகாட்டில் இடும் வரை
வரும் இசைப்பண்பாடு

உடலசையா நேரத்திலே
இசையொத்த விரலசைவும்
நடனம்தான் இது
வரலாறு வளர்த்த‌
வரலாற்றை வளர்த்த‌
உன்னத பண்பாடு

*ஞானம் தேடி
கண்களில் பசித்திருத்தல்
கிடைத்தால் மட்டும்
வயிற்றுக்கு புசித்திருத்தல்
உண்மை ஊருக்கு உரைத்திருத்தல்
துறவியின் பண்பாடு

ஆனால்

*அலங்கார மண்டபத்தின்
ஆடமபர அறைகளில்
சிறுதுளி போலே சிதறும்
ஒளி ஊடே தொலைகிறது பண்பாடு

அங்கே
இறைத்து கொட்டும்போது
மொத்தமாய் விழும் நீர் போலே
பொத்தென விழும் இசை இறைச்சலில்
இறந்துபோன பண்பாட்டிற்கு
இரவு முழுவதும் வழ்ங்கப்படுகிறது
இறைச்சல் அஞ்சலி

*தீவிரவாத தாக்குதல்களில்
சிதிலமைடகிறது பண்பாடு

*உடலில் இருந்தும்
தெரியாத உடைகளால்
துகிலுரிக்கப்படுகிறது பண்பாடு

*கட்டப்படாத வேட்டிகளில்
கட்டத்தெரியா சேலைகளில்
கட்டுண்டு கிடக்கிறது
பண்டைய பண்பாடு

*முதியோர் இல்லத்தின்
மூலை விசும்பல்களால்
குழந்தை காப்பகத்தின்
அழும் குரல்களால்
வசைபாடப்படுகிறது
வனப்பிழந்த பண்பாடு

*மம்மி டாடிக்களில்
தொலைந்து போன‌
அப்பா அம்மாக்களை
தேடி அலையும்
கன்வென்ட் குழ்ந்தைகளிடம்
கலங்கி நிற்கிறது பண்பாடு

எனினும்...

*விண்வெளி தாண்டிய‌
விஞ்ஞான விடியலில்
கடலின் ஆழம் ஆர்க்கும்
ஆழ்ந்த அறிவியலில்...

மதம் கரைத்து
மனம் குழைத்து
உயிர் வளர்க்கும் காதலில...

இருநாட்டு வெண்கொடியின்
இதமான மோதலில்...

தீண்டப்படாத தீண்டாமையில்...்

நோய் குறைக்கும் விழிப்புணர்வில்
நோய் தீர்க்கும் மருத்துவத்தில்....

கைம்பெண் மறுமண்த்தில்
முதிர்கன்னி விடுதலையில்
வரதட்சணை கைதுகளில்...

சிறுநூல் தறித்து உருவான‌
பெண்ணடிமை நோஞ்சான்
கூடுகளை உடைத்து வீழ்த்துவதில்....

எல்லோர்க்கும் கல்வி
எனும் நிலையில்....

*தழைக்கிறது சமூகம்
உயிர் பிழைக்கிறது பண்பாடு!!!
Related Posts with Thumbnails