*ஏலேய்! முத்தையா
நீ கட்டிவந்த பொட்டக்கழுத
பொட்டப்புள்ள ஈந்திருக்கா...
ஆண் வாரிசு வர்க்கமுன்னு
ஊரு உலகம் நம்மத்தான்
வாயர புகழ்ந்திருக்கு
கண்ணு கோடி வச்சிருக்கு!
*திருஷ்டி வச்சது போல்
பொட்டபுள்ள ஈந்து புட்டா
வலக்கால வக்கிமுன்னே
இடக்கால வச்ச மக!
*அவ வாந்தி எடுத்தப்போ
பேரப்புள்ள வந்ததேன்னு
நான் மயங்கி விழுந்தேனே...
புள்ள நல்லா வளரணுமின்னு
தெனந்தெனந்தான்
நெல்லுச்சோறு ஆக்கிவச்சேன்!!!
நெஞ்சுமேல அவன் மிதிக்க
ஒடம்ப கொஞ்சம் தேத்தி வச்சேன்!!!
சாரலோட வந்த மழை
இடியோட விட்டுடிச்சே...
விருட்சமுன்னு நெனச்சேனே
விசமாகப்போயிருச்சே...
செலவ இவ பெத்துப்போட
செலவு நான் செய்வேனா
*ஒங்கப்பன் சொத்துன்னு
ஒடிஞ்சுபோன நான் இருக்கேன்
ஒடியப்போர நீ இருக்க
ஒரு டம்ளர் பால் கொடுக்கும்
காளக்குட்டி ஈந்த சனியன்
கரவமாடு ஒன்னிருக்கு
*விறகு இல்லேன்னு
கதவா ஆன மரத்த
ரெண்டாம் முறையா வெட்டிவெட்டி
விறகெடுத்து அடுப்பெரிச்சேன்
கன்னம் வைக்கும் கஷ்டம் இல்லேன்னு
கள்ளனே வந்தாலும்
மவராசன் இட்டு வந்ததிலே
இங்க கொஞ்சம் விட்டு போனாதான் உண்டு
எத வித்து
உம்மகள நீ தொலப்ப
*வேண்டாம்டா வெறும்பயலே
தாய்ப்பாலு சொரக்குமுன்னே
கள்ளிப்பாலு ஊத்திருடா
பொழச்சாலும் பொழச்சுக்குவா
நெல்லு ரெண்டு கொழச்சு வாடா
குருத்து கொன்ன பாவத்தீய
பொதச்ச இடத்தோரம்
குருத்து ஒன்னு நட்டு வச்சு
தண்ணி ஊத்தி தணிச்சுக்கலாம்...
* * * * * *
சொன்னதெல்லாம் வார்த்தயில்ல
உசிரறுக்கும் வாளுன்னு
மயங்கி தெளிஞ்சு
தெளிஞ்சு மயங்கி
ஒரு தாய்மை துடிதுடித்தது
* * * * * *
*ஏண்டி மவளே இங்க வந்த...
என்னோட வயித்துகுள்ள
உன்ன குடி வச்சானே
குடிகார உங்கப்பன்
குடிகெடுக்க வந்தவன்னு
கொன்னு கொல்லையில போட
அடி எடுத்து வச்சிபுட்டான்
ஆத்தா சொல்லுக்கு
புடி கொடுத்து உட்டுபுட்டான்
*ஏண்டி மவளே இங்க வந்த...
பத்து மாசம் கூட
முழுசாக வாழாம
மூணு மாசம் முன்னாடி
முந்திகிட்டு வந்ததெல்லாம்
முணுமுணுக்க முயலும் போதே
முடங்கி நீ போறதுக்கா
அவசரமா வந்தவளே
ஆத்தா வலி புரிஞ்சு
அழுதுகிட்டே பொறந்தவளே
சீரழியும் கத கேட்டும்
புரியாம் சிரிப்பவளே
ஏண்டி மவளே இங்க வந்த
*கள்ளிக் குருத்தோரம்
லேசாக கருத்திருக்காம்
உரமாக ஓன் உசிரு
ஒப்படைக்க போராக
மறுபடியும் சொமந்தாலும்
மகராசி ஒனப்போல
மக எப்ப நான் சொமப்பேன்
கம்போட நிக்கும் போது
பாம்பு சீறி என்ன பண்ண...
அழுது வக்கிறேண்டி
ஒனக்காக சொரந்த பால
கண்ணீரா கக்கறேண்டி
அறுந்த தொப்புள்கொடி
ஓன் நினைவா வக்கிறேண்டி...
No comments:
Post a Comment