*பொறி
சின்ன பொறி
உலகை பயமுறுத்தும் மனிதனை
பயப்பட வைத்த பொறி!
*இரு கற்களுக்கு பிறந்தும்
கல்லின் தன்மை இல்லாத பொறி!
*மனித ஞானத்தின்
மானம் இந்த பொறி
அவன் அறிவு அணிந்த
ஆரம்ப ஆடை இந்த பொறி!
*உலகின் பரிணாம வளர்ச்சிகளில்
பரிமாணம் வளர்த்த பொறி
இது ஆக்ஸிஜனை உள்ளிழுத்து
அங்கம் கொழுத்த பொறி!
*தீபமாய் எழுந்து
பக்தியை அளிக்கும்
மதவெறி பிடித்து
தீயாய் எழுந்து
பக்தனை அழிக்கும்
*அக்னியாகி கடவுள் ஆகும்
ராத்திரி பொழுதின் கதிரவன் ஆகும்
*நெய்யைக் குடித்து
யாகம் ஆகும்
உயிரைக் குடித்து
பாவம் ஆகும்-இது
அனுமனின் வீரம்
அடுக்கிய தீ!
கண்ணகி கற்பை
மதுரையில் எங்கும்
பரப்பிய தீ!
நமக்கும் தீக்கும்
உலகில் ஒருவகை பந்தம் உண்டு
*நீ பிறந்தது தெரிந்து
தானும் பிறந்து
உன்னை அழைக்கும் ஆரத்தீ!
*நீ வளரும் போது
தானும் வளர்ந்து
தொட்டால் சுடும்-என
அறிவு வளர்க்கும் நெருப்பு!
*நித்தம் உனக்கு
உணவு தரும்
அடுப்பங்கரை அனல்!
*இளைஞனென்று
உனை கர்வம் கொள்ளச்செய்யும்
சிகரெட் சூடு!
*உனக்கு நரைத்தல்
நெருப்புக்கு இளைத்தல்
இரண்டும் நிகழ்வது
நிதர்சன உண்மை...
*உன் பக்தியில் உன்னிடம்
தணிவாய் எரியும் தீபம்
உனை பந்தியாய் போட்டு
அள்ளித்திண்ணும் கொள்ளி!
*தீயை நீ எரிப்பது எண்ணம்
உன்னை எரித்து
உன்கதை முடிப்பது
தீயின் திண்ணம்!!!
No comments:
Post a Comment