*குருவிகள் கட்டிய கூடு
குருவிக்கு சொந்தம் இல்லை
நாங்கள் கட்டிய கூடு
எங்கள் சொந்தம் இல்லையா
நாங்கள் என்ன குருவிகளா?
*கூடுவிட்டு கூடு கட்டி
கூடி வாழ குருவிகளால் ஆகும்
தாய் வீடு விட்டு நாடு நகர்ந்து
அலைச்சத்தமும் அழுகைசத்தமும்
மறந்து வாழ அகதிகளால் ஆகுமா?
*பதுங்கு குழியின் இரண்டு நாள் இருட்டில்
கவனம் கலையாத அன்னையின் சீலைப்போர்வை
தந்த பாதுகாப்பை...
ஒளிபுக முடியா நெருக்கத்தில்
சகோதரனின் வேர்வை தந்த குளிரை...
சிறுநீர் கழிக்க உயிரை பணயம் வைத்த
தகப்பனின் வருகைகேங்கும் மனதை...
காலை கட்டிலாக்கி
கால் மயிரை மெத்தையாக்கி
மேல் சட்டையை காற்றாடியாக்கி
மாமன் தந்த உறக்கத்தை ....
சிறு துளை கீற்று வெளிச்சத்தில்
எனக்கான பார்வைகள் தேக்கி
காத்திருந்த அவள் கண்களை...
மீட்டுத்தருமா போர்!!!
*நித்தம் நிகழும்
உயிர்பலிகளின் இலக்கங்களில்
பொய்கள் சொல்லி இலக்குகளை எட்டுவதாய்
எங்களை புறந்தள்ளி
போர்முனை மட்டும் போனது எங்கே???
*பதுங்கு குழி வாழ்வை மாற்ற
பலியாவதும் புலியாவதும்தான்
நாங்கள் உற்ற ஒற்றை வழி
பழி சொல்லும் நாடுகளுக்கு எங்கள்
வலி உணரும் புலன்கள் இல்லை...
*பங்கர் குண்டு, வெண்பாஸ்பரஸ் மழை,
கண்ணிவெடி, கொதுக்குண்டு, க்ளஸ்டர்
வெள்ளைவேனில் தொலைந்து போன ஆண்கள்
கொல்லைபுறத்தில் கற்பிழந்த பெண்கள்
இதை நித்தம் நீங்கள்
படித்து மறந்து போகிறீர்
இதில் நித்தம் நாங்கள்
இதயம் துடிக்க மறந்து வாழ்கிறோம்!!!
*குணம் பிளன்ர கொதபாய் - ஓர்
இனம் அளிக்க உரை கொண்டால்
சினை கொள்வோம் மீண்டும் மீண்டும்
சினம் கொள்வோம் யாண்டும் யாண்டும்
சிறை கொள்வோம்
இலங்கை சுற்றம் கரை கொள்வோம்
*பதைபதைத்து இறந்த உடல்
பதியுங்கள் குழி பறித்து
விதைபோல விழித்தெழுவோம்
பறைசாடி கதைத்திடுவோம்
இருள்வதால் முடியாது
இரவியின் கதை என்று...