*ஓ அந்த விடுப்புகள்
கல்விக்கால உடுப்புகள்
என் முதல் கற்பனைத்துளிகள்
ஆம்
என் பொய்கள் தாங்கிய
ஒரு பக்க பெட்டகங்கள்
*தந்தையின் கையெழுத்தை
எனக்கு கற்றுக் கொடுத்ததுவும்
அவரிடம் என்னை மாட்டி விட்டதுவும்
இந்த விடுப்புதான்!
*மருத்துவரை அனுகியதேயில்லை
பெருமையாய் கூறும் பாட்டியை
பலமுறை சாகடிக்க வைத்ததும்
இந்த விடுப்புதான்!
*திருமணம் விரும்பா
அண்ணணுக்கு கல்யாண தேதி
கண்டெடுத்ததுவும்...
உள்ளூர் தாண்டா எனக்கு
வெளியூர் விசா
வாங்கி தந்ததுவும்...
வலிக்காத வயிருக்காய்
மருத்துவரை அணுக வைத்ததுவும்...
என் நடிப்பு ஆசையை
மேடைகளில்லாமல்
நிறைவேற்ற உதவியதும்...
இந்த விடுப்புதான்!
*நண்பனுக்காய் ஒரு நாள்
நேர தாமதத்தால் ஒரு நாள்
நாசமாய்ப்போன படத்திற்காய் ஒரு நாள்
மகிழ்ச்சிக்காய் ஒரு நாள்
மகிழ்ச்சி தந்த அலுப்பிற்காய் ஒரு நாள்
விடுப்பெடுத்த நாளின் பாடம் எழுத ஒரு நாள்
சும்மா ஒரு நாள்
என இத்தனை நாளுக்கும்
ஈடு கொடுத்ததுவும்
இந்த விடுப்புதான்!
இந்த விடுப்பு
இயக்குநர் தாளாளர்
முதலியோருக்கு என்னை
அறிமுகம் செய்த விடுப்பு!
நண்பர் வட்டாரம்
அதிகப்படுத்திய விடுப்பு!
என் தேர்வு முடிவை
அன்றைக்கே அறிவிக்கும்
இந்த விடுப்பு!
நான் படித்ததில்
இன்னும் மறக்காதவை
"அ ஆ"
"ABCD"
அப்புறம் இந்த "விடுப்பு"
ஆனாலும்
இந்த விடுப்புதான்
என் நல்ல பெயர் மாற்றியதும்...
அல்லவை எல்லாம்
நல்லவை என்றதும்...
நல்லவை எல்லாம்
அல்லவை என்றதும்...
என் பாதையிலிருந்த
பூக்கள் பிடுங்கி
முட்கள் நட்டதுவும்...
கல்வியின் நாட்டத்தை
போதையென பொய் சொல்லி
புதைகுழியில் தள்ளியதும்...
"கண் கெட்ட பின்னே"
பழமொழியின் அர்த்தம்
அறிய வைத்ததுவும்...
சக மாணவர் பார்த்து
ஏங்க வைத்ததுவும்...
எல்லாம் விதியென
சொல்ல வைத்ததுவும்...
இந்த விடுப்புதான்...
இதே விடுப்புதான்...
இப்படிக்கு
தங்கள் கீழ்பணிந்த
ஒரு தண்டச்சோறு