* தூங்கும் உன் கைகள்
இல்லாமலே
களைகிறதென் நடுநிசி உறக்கம்
* இனி அதிகாலைத் தேனீர்
என்னை மட்டும்தான் எழுப்பும்
* எழுந்த பின்னும்
தொடர்ந்து உறங்க
அறையில் இனி ஆள் இல்லை
* அனாதை என
யாரும் எனை சுட்டியதில்லை
உன் மரணம் தவிர!!!
* அறையில் என்னுடன் பேச
அழைபேசி தவிர
யாருமில்லை இஷ்மாயில்...
* நகம் கடித்தல் பிடிக்காதெனக்கு
இப்போதெல்லாம்
கடித்துவிழும் என் கட்டைவிரல் நகம்
நகைக்கிறது அழகாய் உன்னைப்போலவே!
* கலைப்படுத்தியும் அழகு சேர்ப்பதாயில்லை
கலைத்துப்போடும் நீ இன்றி
அறையில் பொருட்கள்
* உள்ளிருக்கும் உன்னால்
தெளிக்கப்படாத நீரால்
பாலையாகி விட்டது
குளியலறை வாசலில் தரை
* நீ இறந்து போனாயா
எனக்குள் நீயாய் புதைந்து போனாயா
குழம்புகிறேன் இஷ்மாயில்...
* என்றுமே மறக்க மாட்டாய்
ஆனால் அன்று மட்டும்
நீ மறந்த உன் மூக்குக்கண்ணாடி
என்றுமே மறக்க முடியாத உன் நினைவுகள்
இரண்டினோடும்
இன்னமும் வாழ்கிறேன் நான்!
No comments:
Post a Comment